தமிழக அரசியலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் தனது முதல் தேர்தலைச் சந்தித்துள்ளது. இந்த நிலையில், அக்கட்சிக்குச் சாதகமான தொகுதிகள் குறித்த பல்வேறு கணிப்புகள் வெளியாகத் தொடங்கியுள்ளன. குறிப்பாகத் தலைநகர் சென்னையில் தவெக கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரம்பூர், அண்ணா நகர், ஆவடி, அம்பத்தூர், மாதவரம், மயிலாப்பூர், வேளச்சேரி, எழும்பூர் மற்றும் வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகளில் தவெகவின் வாக்கு வங்கி வலுவாக இருக்கும் என்றும், இந்தத் தொகுதிகளில் மற்ற பிரதான கட்சிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் கடும் போட்டியை  வழங்கும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இதில் ஒருசில தொகுதிகளில் தவெக வெற்றியைக் கைப்பற்றவும் வாய்ப்புள்ளதாகத் தற்போதைய கள நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சென்னை மாநகருக்கு வெளியே உள்ள முக்கியமான நகரங்களிலும் தவெகவிற்குச் சாதகமான சூழல் நிலவுவது கவனிக்கத்தக்கது. காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஸ்ரீபெரும்புதூர், தொழில் நகரமான திருப்பூர், ஆன்மீகம் மற்றும் பாரம்பரியம் மிக்க ஸ்ரீரங்கம், தென்மாவட்டத்தின் முக்கிய மையமான தூத்துக்குடி மற்றும் மேற்கு மண்டலத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம் ஆகிய தொகுதிகளில் தவெகவின் செல்வாக்கு உயர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தவெகவிற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளதால், இந்தத் தொகுதிகளில் அக்கட்சி வெற்றிக்கான வாய்ப்புகளைத் தக்கவைத்துக் கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலில், திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தவெக உருவெடுக்குமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. விஜய்க்கு இருக்கும் பிரம்மாண்டமான ரசிகர் பட்டாளம் மற்றும் அவர்களின் களப்பணி ஆகியவை இந்தத் தொகுதிகளில் வாக்குகளாக மாறும் பட்சத்தில், அது தமிழக தேர்தல் முடிவுகளில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். குறிப்பாக, நகர்ப்புற வாக்காளர்கள் மற்றும் மத்திய வர்க்கத்தினர் அதிகம் வாழும் சென்னை போன்ற பகுதிகளில் தவெகவின் புதிய அரசியல் அணுகுமுறை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்தே அக்கட்சியின் எதிர்காலம் அமையும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version