வரும் 23ம் தேதி தவெக தலைவர் விஜய் வேலூரில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தவுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியாற்றி வருகின்றன. தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதே அனைத்துக் கட்சியினரும் தங்களது பிரச்சார வியூகத்தை அமைத்து களத்தில் குதித்து வருகின்றன. அந்த வகையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பல்வேறு ஊர்களுக்கு சென்று பொதுமக்களை சந்தித்து வருகிறார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் கரூரில் நடத்திய பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். அதன் பிறகு கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் இருந்த அவர், கடந்த டிசம்பர் 11 ஆம் தேதி புதுச்சேரியில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார். கரூர் சம்பவத்துக்கு பின் தமிழ்நாட்டில் முதல் முறையாக ஈரோடு மாவட்டம், பெருந்துறை விஜயமங்கலம் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்றது.
அதனை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பிரச்சார பொதுக்கூட்டத்தை நடத்த திட்டமிட்டிருந்தார் விஜய். பிப்ரவரி 2வது வாரத்தில் இந்த மக்கள் சந்திப்பை நடத்த விஜய் திட்டமிட்டார். பள்ளிகொண்டா அடுத்த சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஒடுகத்தூர் செல்லும் சாலையில் அகரம்சேரி எனும் இடத்தில் எட்டு பேருக்கு சொந்தமான சுமார் 25 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தினை தவெக கட்சியினர் தேர்வு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். ஆனால் விஜய்யின் வேலூர் மக்கள் சந்திப்பு கூட்டம் பிப்ரவரி 2வது வாரத்தில் நடக்கவிருந்த நிலையில், பிப்ரவரி இறுதி வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இதனை தொடர்ந்து கடந்த வாரம் அதிமுகவின் கோட்டையான சேலத்திலேயே மக்கள் சந்திப்பை நடத்தி காட்டியிருந்தார் விஜய். இந்த கூட்டத்திலும் கரூர் சம்பவத்தை போல வெயில் மற்றும் கூட்டநெரிசலால் சூரஜ் என்பவர் உயிரிழந்தது பேசுப்பொருளானது. இந்த கூட்டத்தில் திமுக – அதிமுகவை கடுமையாக விமர்சித்த விஜய்யை, தமிழக பாஜக தலைவரான நயினார் நாகேந்திரன், த்ரிசாவுடன் ஒப்பிட்டு பேசியது சர்ச்சையானது. பிறகு இதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார் நயினார்.

இந்தநிலையில், வரும் 23ம் தேதி வேலூரில் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டத்தை நடத்தவுள்ளதாக தவெக மாவட்ட செயலாளர் வேல்முருகன் தெரிவித்தார். இதற்காக, வேலூரை அடுத்த பள்ளிகொண்டா அகரம்சேரி பகுதியில் மைதானத்தை சீர் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள செடி, கொடிகள் அகற்றும் பணிகள் உள்ளிட்டவை மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில், தவெக பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி கோரி, வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமனிடம் இன்று கடிதம் அளிக்கப்பட்டது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வேல்முருகன், “விஜய் பிரச்சாரத்திற்கான அனுமதி விரைவில் உறுதிப்படுத்தப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை விதிக்கும் அனைத்து நிபந்தனைகளையும் 100 சதவீதம் கடைப்பிடிப்போம் என உறுதியளித்துள்ளோம். அதேபோல, மக்கள் சந்திப்பிற்கு வரும் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில், அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன.

மொத்தம் ஐந்து சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய இந்த மக்கள் சந்திப்புக்கு, சுமார் 33 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய மேடை அமைக்கப்படவுள்ளது. ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், மொத்தமாக 25,000 பேர் கலந்து கொள்வார்கள் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஆம்பூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்தவர்கள் அதிகளவில் பங்கேற்கலாம்” என்றார்.
மேலும் பேசிய அவர், “ஒவ்வொரு கேலரிக்கும் தனித்தனியாக குடிநீர் தொட்டிகள் அமைக்கப்படும். ஒரு லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமின்றி, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு 50 மருத்துவர்கள், 100 செவிலியர்கள் உட்பட ஒரு மினி மருத்துவமனை அமைக்கப்படும். அவசர நிலைக்கு 10 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் இருக்கும்.

அந்த வகையில், மருத்துவ வசதிகள், கழிவறை வசதிகள், போதுமான குடிநீர் என அனைத்து அடிப்படை வசதிகளும், பாதுகாப்புடன் செய்யப்பட்டு வருகிறது. ஆறு இடங்களில் 20 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி வயதானவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் போன்றோர் கூட்டத்திற்கு வருவதை தவிர்க்கவும், சென்னையில் வேலூருக்கு விஜய் சாலை மார்க்கமாக வரவுள்ளதால், இளைஞர்கள் யாரும் வாகனங்களில் பின் தொடர வேண்டாம் என கட்சி சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
விஜய் வரும் நேரத்தை கட்சித் தலைமை விரைவில் அறிவிக்கும். நம்மை நம்பி நமது ஊருக்கு வருகிறார் விஜய். அவருக்கும், மக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற ஒத்துழைக்க வேண்டும். கட்சி தொடங்கிய பிறகு, முதல்முறையாக விஜய் வேலூர் மண்ணுக்கு வருகிறார். எனவே, இந்நிகழ்ச்சி அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது. ‘வேலூர் கோட்டையில் கால் வைக்கும் அனைவரும் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றுவார்கள்’ அதன் அடிப்படையில், வேலூர் விஜய்க்கு வெற்றியின் தொடக்கமாக அமையும்” என தெரிவித்தார்.
