தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொண்டு வரும் சூறாவளிப் பிரச்சாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ள சூழலில், நாளை மாலையுடன் தேர்தல் பிரச்சாரங்கள் அனைத்தும் நிறைவடைகின்றன. இதனால் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வாக்காளர்களைக் கவரத் தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடும் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக மாநிலம் தழுவிய அளவில் இறுதிக்கட்டப் பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மற்றும் சென்னையின் முக்கியப் பகுதிகளான வில்லிவாக்கம், அண்ணா நகர், விருகம்பாக்கம் ஆகிய இடங்களில் தனது பரப்புரைப் பயணத்தைத் திட்டமிட்டிருந்த விஜய், இன்று பனையூர் இல்லத்திலிருந்து புறப்பட்டு கும்மிடிப்பூண்டி தொகுதியில் தனது ரோடு ஷோவை தொடங்கினார். திறந்த வாகனத்தில் நின்றபடி மக்களிடையே வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்ட அவருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களும் பொதுமக்களும் மலர்களைத் தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் மக்களின் அன்பு மழையில் நனைந்தபடி அவர் தனது பயணத்தைத் தொடர்ந்தார்.
பிரச்சாரத்தின் போது எதிர்பாராத சுவாரசிய நிகழ்வாக, கொளப்பஞ்சேரி பகுதியில் விஜய்யின் வாகனத்தைச் சூழ்ந்த ஒரு புதுமணத் தம்பதி அவரிடம் வாழ்த்துப் பெற வேண்டினர். அவர்களின் கோரிக்கையை ஏற்று வாகனத்தை நிறுத்திய விஜய், புன்னகையுடன் மணமக்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். விஜய்யின் இந்த அதிரடி ரோடு ஷோ காரணமாகப் பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி சாலைகளில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போதிலும், அதைப் பொருட்படுத்தாமல் விஜய்யை பார்க்க மக்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்
