தேனி மாவட்டம், வருசநாடு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் வறண்டு காணப்பட்ட மூல வைகை ஆற்றில் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
இந்த ஆண்டு வழக்கத்திற்கு முன்பாகவே தென்மேற்குப் பருவமழை தேனி மாவட்டத்தில் தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால், கடந்த சில மாதங்களாக வறண்டு மணல்மேடாகக் காட்சியளித்த வைகை ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது.
விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி:
கோடை காலத்தில் தொடங்கியுள்ள இந்த நீர்வரத்தால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வைகை ஆற்றங்கரையோரம் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான விவசாயக் கிணறுகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு நீங்கியது:
வைகை ஆற்றில் ஏற்பட்டுள்ள நீர்வரத்து காரணமாக, வைகை ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான வருசநாடு சுற்றுவட்டார கிராமங்களில் நிலவி வந்த குடிநீர் தட்டுப்பாடு அடியோடு நீங்கியுள்ளது. நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மேலும், வைகை அணையிலும் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
இதனால் இப்பகுதி மக்களும் விவசாயிகளும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.