தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்த விவகாரத்தில் எழுந்துள்ள விமர்சனங்களுக்குத் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் முதலமைச்சர் விஜய் பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார். விழா நிறைவடைந்து அவர் மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவரை வழியனுப்பி வைத்தப்பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, விரைவில் அமையவுள்ள தவெக அமைச்சரவையில் காங்கிரஸும் இடம்பெறப் போகிறது என்றார்.

மேலும், காங்கிரஸ் கட்சி திமுகவின் முதுகில் குத்திவிட்டுச் சென்றுவிட்டதாகச் சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விமர்சனங்கள் வலுத்து வந்த நிலையில், அதற்கு பதிலளித்த செல்வப்பெருந்தகை, “நாங்கள் யாருக்கும் துரோகம் செய்யவில்லை; அனைத்துத் தகவல்களையும் முறையாகத் தெரிவித்துவிட்டுத்தான் தவெக கூட்டணிக்கு வந்தோம்” என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

அதாவது, தவெக-வுடன் கூட்டணி வைக்கும் முன்பே டெல்லி மேலிடம் முறையாக திமுகவிடம் ஆலோசனை நடத்தியதை உறுதிப்படுத்தினார். குறிப்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே திமுகவின் பொருளாளர் டி.ஆர். பாலுவிடமும், அதேபோல் ராகுல் காந்தி திமுக எம்.பி. கனிமொழியிடமும் இது குறித்து முன்கூட்டியே விரிவாகத் தெரிவித்துவிட்டதாகக் குறிப்பிட்டார். சொல்லாமல் யாரும் செல்லவில்லை. திமுகவிடம் சொல்லிவிட்டுதான் சென்றோம் என்று விளக்கமளித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version