ஆணவ கொலைகளுக்கு எதிராக ”இவா நம்மவா” மசோதாவை கர்நாடக அரசு நிறைவேற்றியுள்ளதற்கு மாணிக்கம் தாகூர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, எக்ஸ் பக்கத்தில் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கவுரவ கொலைகளைத் தடுக்க ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதாகவும், அந்த கோரிக்கையை கர்நாடக அரசு “இவா நம்மவா” என்ற மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றி உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதுவே உண்மையான சமூக நீதி எனக்கூறியுள்ள அவர், குறைவான பேச்சு மற்றும் அதிகமான செயல் என தெரிவித்துள்ளார். இந்த முன்னேற்றமான முயற்சிக்காக சமூகநீதி காவலன் ராகுல் காந்தியின் தலைமைக்கும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் முயற்சிக்கும் பாராட்டுகள் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழகத்தில் இதுபோன்ற ஒரு வலுவான சட்டம் கொண்டு வந்து மனித உரிமைகள், சமத்துவம் மற்றும் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்க வேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்டுள்ள மாணிக்கம் தாகூர், இது எப்போது நடக்கும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் தன்னை சமூக நீதி காவலர், சமூகநீதி அரசு என பேசி வரும் நிலையில், ராகுல் காந்திக்கு சமூக நீதி காவலன் என்ற பட்டத்தை மாணிக்கம் தாகூர் சூட்டியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
