2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு திராவிடப் பேரியக்கங்களும் தங்கள் வேட்பாளர் பட்டியலை முழுமையாக வெளியிட்டுள்ள நிலையில், தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில், 121 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் நேரடியாக மோதுகின்றனர். இது கடந்த தேர்தல்களை விட இரு கட்சிகளுக்கும் இடையிலான நேரடிப் போட்டியை அதிகப்படுத்தியுள்ளது.
கூட்டணி கட்சிகளின் பலத்தையும் கணக்கில் கொண்டால், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் சிறிய கட்சிகள் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் தோழமைக் கட்சிகளையும் சேர்த்து, மொத்தம் 133 தொகுதிகளில் இரு அணிகளும் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த நேரடி மோதல் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இரு கட்சிகளின் வாக்கு வங்கியைச் சரியாகக் கணிக்கும் களமாகவும் இது அமையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
குறிப்பாக, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் 15 தொகுதிகளில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலினை எதிர்த்து அதிமுகவின் பி. சந்தானகிருஷ்ணனும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து ஆதி ராஜாராமும் களம் காண்கின்றனர். சென்னையின் பெரும்பாலான தொகுதிகள் இரு கட்சிகளுக்கும் கௌரவப் பிரச்சினையாக மாறியுள்ளதால், தலைநகரில் தேர்தல் களம் இப்போதே உச்சக்கட்ட விறுவிறுப்பை எட்டியுள்ளது.
சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் DCM உதயநிதியை எதிர்த்து அதிமுகவின் ஆதிராஜாராம் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். 2021-ல் CM ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட அவர் 70,384 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். முன்னதாக, 2006-ல் ஆயிரம் விளக்கு தொகுதியில் CM ஸ்டாலினை விட 2,468 வாக்குகள் வித்தியாசத்திலேயே ஆதிராஜாராம் தோல்வியடைந்திருந்தார்.
