தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் டி.செல்வத்தை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கி, மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா சமீபத்தில் வெளியிட்ட ஒரு கருத்து, காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியது. “திமுகவுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் இன்று தன் அடையாளத்தை இழந்துவிட்டது; இதனால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸின் பொதுச் செயலாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் தவெக வாசலில் காத்துக்கிடக்கிறார்கள், இன்னும் இரண்டு நாட்களில் அவர்கள் முறைப்படி தவெக-வில் இணைய உள்ளனர்” என ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார்.
இந்த விவகாரத்தில் டி.செல்வத்தின் செயல்பாடுகள் கட்சி ஒழுங்குமுறைக்கு முரணாக இருந்ததாகக் கூறி, அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், கூட்டணி விவகாரங்கள் மற்றும் உட்கட்சிப் பூசல்கள் காரணமாக காங்கிரஸ் நிர்வாகிகள் மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்வது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் அரசியல் நகர்வுகள் திமுக-காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு வங்கியில் கைவைக்கத் தொடங்கியுள்ளதை இந்தச் சம்பவம் உறுதிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
இந்தநிலையில், அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகையிடம் செல்வத்தை நீக்கியது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், அகில இந்திய தலைமை தான் நடவடிக்கை எடுக்க சொல்லியது என்றார்.
