கோவை, சின்னியம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாகாளி. இவர் அரசூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி செல்வி, அங்கு உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவர் இரவில் வேலை முடித்து தனது கணவர் மாகாளி மற்றும் ரங்கம்மாள் ஆகியோருடன் பணம் எடுப்பதற்காக ஏ.டி.எம் மையத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் அவர்கள் மூன்று பேரும் கோவை-அவிநாசி சாலையில் சின்னியம்பாளையம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தனர்.
அப்பொழுது அந்த வழியாக வேகமாக வந்த சரக்கு வேன் திடீரென சாலை ஓரத்தில் சென்று கொண்டிருந்த மாகாளி உட்பட 3 பேர் மீது மோதியது. இதில் அவர்கள் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்த அவர்களை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். அதில் சிகிச்சை பலனின்றி செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த ரங்கம்மாள், மாகாளி ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து கோவை மாநகர கிழக்குப் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சரக்கு வேனை ஓட்டி வந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.
சிறுவனிடம் சரக்கு வேன் ஓட்ட கொடுத்த அந்த வாகனத்தின் உரிமையாளரான பைலட் ராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அந்த 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து 15 நாட்கள் போக்குவரத்து சரி செய்யும் பணி ஒதுக்கி உள்ளனர்.