ஏமனில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்
2017-ம் ஆண்டு ஏமனில் நிகழ்ந்த தகராறு ஒன்றில் தலால் அப்து மாஹ்தி என்பவர் கொல்லப்பட்டார். அவரை கொலை செய்ததாக இந்திய செவிலியர் நிமிஷா ப்ரியாவுக்கு ஏமன் நீதிமன்றம் கடந்த 2020-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து நிமிஷா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் 2023-ம் ஆண்டு தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் உறுதி செய்தது.
வரும் 16ஆம் தேதி ஏமனில் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில் தன்னை காப்பாற்றுமாறு நிமிஷா ப்ரியா தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் இந்திய அரசாங்கம் ராஜாங்கரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறுத்த வேண்டும் என அதில் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக இன்று அல்லது நாளை பட்டியலிட்டு விசாரணை செய்ய வேண்டும் என அதில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்று வழக்கு திங்கள் கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
நிமிஷா பிரியாவை மீட்பதற்கு ‘சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சில்’ என்ற குழுவும், நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரியும் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். ஏமன் நாட்டில் ஷரியத் சட்டம் நடைமுறையில் இருப்பதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ‘ப்ளட் மணி (Blood Money)’ என்னும் இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்து மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே நிமிஷாவை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும். தற்போது நிமிஷா ப்ரியா ஏமன் தலைநகர் சனாவில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.