எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி தனித்து போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அதிமுக கூட்டணியிலிருந்து விலகி புதிய தமிழகம் கட்சி தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, தொகுதிகளைப் பிரிப்பதில் அதிமுக தலைமைக்கும் புதிய தமிழகம் கட்சிக்கும் இடையே சுமுகமான உடன்பாடு எட்டப்படவில்லை என்றார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, புதிய தமிழகத்தை அதிமுக புறக்கணித்துவிட்டது. திடீரென பேச்சுவார்த்தை நின்றுவிட்டது என எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். தேவேந்திர குல வேளாளர்களை அதிமுக அவமதித்துவிட்டதால், நாங்கள் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளோம். நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பது மட்டுமே உண்மையான அரசியல் வெற்றி என்று கூறியுள்ளார்.
புதிய தமிழகம் கட்சி இம்முறை பலப்பரிட்சை செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் சுமார் 70 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் கட்சியின் செல்வாக்குமிக்க இடங்களைத் தேர்வு செய்து, அங்கு பலமான வேட்பாளர்களைக் களம் இறக்க கிருஷ்ணசாமி முடிவு செய்துள்ளார். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாகத் தங்களது வலிமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இம்முறை தனித்துப் போட்டியிடுவதாக அவர் கட்சி நிர்வாகிகளிடையே உரையாற்றினார்.
இந்த முடிவைத் தொடர்ந்து, 70 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய தமிழகம் சார்பில் போட்டியிடப் போகும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வரும் மார்ச் 29-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்தும், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஒரு தொகுதியிலும் போட்டியிட்டது கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சி என்பது குறிப்பிடத்தக்கது.
