கேரள உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சி (LDF) பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளநிலையில், காங்கிரஸ் கூட்டணி (UDF) பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி உள்ளது.

கேரளாவில் கடந்த 9 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. அடுத்தாண்டு வர உள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னோட்டமாக பார்க்கப்பட்ட இந்த தேர்தல் பெரும் மாற்றத்தை தந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர்.

மாலை 5 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள 941 ஊராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 504 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 341 இடங்களிலும், பாஜக கூட்டணி 26 இடங்களிலும் முன்னிலை வகித்தது. 87 நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 54 இடங்களிலும், இடதுசாரி கூட்டணி 28 இடங்களிலும், பாஜக கூட்டணி 1 இடங்களிலும் முன்னிலை பெற்றிருந்தது. இதேபோன்று, 6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 4 (கொச்சி, கொல்லம், திருச்சூர், கண்ணூர்), இடதுசாரி கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி தலா ஒரு இடங்களில் முன்னிலை வகித்தது.

இந்த தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கூட்டணி மீதான மக்களின் நம்பிக்கையின் அறிகுறி என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

ஆளும் (LDF) மற்றும் எதிர்க்கட்சிகளின் (UDF மற்றும் NDA) கூட்டணி வெற்றி பெற்றாலும், இடதுசாரிகளின் கோட்டையான மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜக கூட்டணி (NDA) கைப்பற்றி உள்ளது பெரும் மாற்றமாக பார்க்கப்படுகிறது. இடதுசாரிகளின் பலமாக கருதப்பட்ட திருவனந்தபுரம் மாநகராட்சியில் பெரும்பான்மைக்கு தேவையான வார்டுகளில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.  சாஸ்தாமங்கலம் வார்டில் பாஜக கூட்டணியின் வேட்பாளர் ஸ்ரீலேகா வெற்றி பெற்றுள்ளார். டிஜிபி பணிக்காலத்தை முடித்த அவர், பாஜகவில் சேர்ந்து உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version