பல்வேறு பணிகளுக்காக சிவகங்கை சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சிவகங்கை மாவட்ட விவசாய பாசனத்துக்கு ஆதாரமாக உள்ள வைகை ஆற்றில் இருந்து பிரியும் கானூர் – பழையனூர் உள்ளிட்ட 17 கண்மாய்களுக்கு முறையாக தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்ய, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.40.27 கோடி மதிப்பில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டார். இந்தத் திட்டம் நிறைவுற்ற பின், 7 ஆயிரம் ஏக்கர் பாசன பரப்பு பயன் பெறும். ஆகவே, இந்தத் திட்டத்தை உரிய காலத்திற்குள் முடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும், தடுப்பணை தரமாகக் கட்டப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உதயநிதி அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கழக முன்னோடிகளில் முக்கியமானவரான அண்ணன் சாத்தையாவின் இல்லத்திற்கு சென்று அவரிடம் நலம் விசாரித்தார். அண்மையில் மறைந்த அவருடைய துணைவியார் பார்வதி அம்மாளின் திருவுருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், சில மாதங்கள் முன்பு திருமணமான அண்ணன் சாத்தையாவின் பேரன் பிரவீன் குமார் மற்றும் அவரது வாழ்விணையர் ஜனனி (எ) மஞ்சு ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அதன்பின், சிவகங்கையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட உதயநிதி, அடிப்படை வசதிகள் தொடங்கி முக்கியமான கட்டமைப்புகள் வரை ஒவ்வொரு திட்டங்களின் நிலை குறித்து துறைவாரியாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பட்டா மாறுதல் – சாலைப் பணிகள் – கல்வி மற்றும் சுகாதாரம் போன்றவற்றிற்காக மக்கள் அளிக்கின்ற மனுக்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ஆட்சியர் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவில், ரூ.33.23 கோடி மதிப்பில் நிறைவுற்ற 36 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து ரூ.4.58 கோடி மதிப்பிலான 5 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேலும், 1,512 பயனாளிகளுக்கு ரூ.24.24 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த விழாவில், சுய உதவிக்குழு சகோதரிகளின் தயாரிப்புகளை பார்வையிட்டு, வீட்டு மனைப்பட்டா – “கலைஞர் கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் வீடுகள் வழங்குவதற்கான ஆணைகள் – விவசாயிகளுக்கு நலத்திட்டம் – மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக்கடன் இணைப்புகள் – கூட்டுறவுத்துறை சார்பில் கடனுதவி – கல்வி உதவித்தொகை – மாற்றுதிறனாளிகளுக்கு மடக்கு சக்கர நாற்காலி, மோட்டார் தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அதன்பின், சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதியில் இன்று ஆய்வு மேற்கொண்டார். விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களைச் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களோடு அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டு அதன் தரத்தை ஆய்வு செய்தார். மாணவர்களுக்கான தங்குமிடம், குளியல் மற்றும் கழிவறை வசதிகளையும் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

Share.
Leave A Reply

Exit mobile version