அமெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடனுக்கு புரோஸ்டேட் வகை புற்றுநோய் இருப்பதாகவும், இன்னும் 5 ஆண்டுகள் மட்டுமே அவர் உயிருடன் இருப்பார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
82 வயதான ஜோ பைடன் கடந்த 2021-2025-ம் ஆண்டு வரை அமெரிக்காவின் 46-வது அதிபராக இருந்தவர். கடந்தாண்டு நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக இருந்த நிலையில், வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக அதிபர் தேர்தலில் இருந்து விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்.
இந்த நிலையில் ஜோ பைடனுக்கு புரோஸ்டெட் வகை கேன்சர் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டதால், மருத்துவமனையில் சோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவில் அவருக்கு கேன்சர் இருப்பது தெரியவந்திருப்பதாக பைடனின் அலுவலகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பைடன் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்த கேன்சர் மிகவும் தீவிரமாக இருக்கும் அதே வேளையில், இது ஹார்மோன் சென்சிடிவ்வாக இருப்பது தெரிகிறது. இதனால் கேன்சரை சற்று எளிதாகச் சமாளிக்க முடியும். அடுத்து என்ன மாதிரியான சிகிச்சை எடுக்கலாம் என்பது குறித்து பைடனும் அவரது குடும்பத்தினரும் ஆலோசித்து வருகிறார்கள்” என தெரிவித்துள்ளது. ஜோ பைடனின் மகன் பியூ பைடனும் கடந்த 2015-ம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
புரோஸ்டெட் புற்றுநோய் என்றால் என்ன?
புரோஸ்டெட் புற்றுநோய் என்பது சிறுநீர்ப்பைக்கு கீழ் உள்ள ஆண் இனப்பெருக்க அமைப்பில் உள்ள சுரப்பியான புரோஸ்டெட்டில் உள்ள செல்களின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியாகும். புரோஸ்டேட் என்பது ஆண்களில் மட்டுமே காணப்படும் ஒரு சுரப்பியாகும். இது விந்துவின் ஒரு பகுதியாக இருக்கும் திரவத்தில் ஒரு பகுதியை உருவாக்குகிறது. இந்த நோய் இருப்பது ஆணின் 67வது வயதில் தெரியவரும் என்கிறனர் மருத்துவர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு வழி வழியாக புற்றுநோய் இருக்கும் பட்சத்தில் இவ்வகை புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 3,50,000 பேர் இந்த வகை புற்றுநோயால் உயிரிழப்பதாக கூறப்படுகிறது.