சென்னையில், குறைந்த விலையில் தங்கம் தருவதாக ரூ.20 கோடி மோசடி செய்து,  தலைமறைவாக இருந்த பெண் காவல் ஆய்வாளர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

இராயபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவர் ஷீலா மேரி. இவர் தனது உறவினரான சென்னை கொடுங்கையூரை சேர்ந்த பிரபுமணி மூலமாக ‘விநாயகம் என்டர்பிரைசஸ்’ என்ற பெயரில் நிறுவனம் நடத்தி, குறைந்த விலைக்கு தங்க காசுகள் தரும் திட்டத்தை தொடங்கினார்.

இந்த திட்டத்தில் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம், குறைந்த விலையில் தங்க காசுகள் வாங்கலாம், வீட்டு மனைகள் குறைந்த விலையில் வாங்கித் தருகிறோம் என பல்வேறு முதலீட்டு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளார்.

கடந்த 2023 மற்றும் 2024-ம் ஆண்டு வரை 200-க்கும் மேற்படட்டோர் பிரபு மணி நடத்தி வந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். பிரபு மணி பெரும்பாலும் ஆய்வாளர் ஷீலா மேரியின் காவல்துறை வாகனத்திலேயே வைத்து, மக்களவைத் தேர்தல் நேரத்தில் தங்கக் காசுகளை வழங்கியுள்ளார்.

இதனால் நம்பிக்கை ஏற்பட்டு மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக போலீஸாரும், போலீஸ் அதிகாரிகள் பலரும் கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்நிறுவனத்தை 2024 இறுதியில் மூடிவிட்டு பிரபுமணி தலைமறைவாகிவிட்டார். இவரிடம் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டவர்கள் சென்னை அசோக் நகரில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தனர்.

மொத்தம் ரூ.20 கோடி வரை இழந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து முதல் கட்டமாக பிரபுமணி மீது போலீஸார் வழக்குப் பதிந்தனர். தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியும் மோசடிக்கு உடந்தையாக இருந்தது உறுதி செய்யப்பட்டதால், அவர் மீதும் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனையடுத்து, தங்க நகை மோசடி வழக்கு விவகாரத்தில் சிக்கிய காவல் ஆய்வாளர் ஷீலா மேரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கைது நடவடிக்கைக்கு அஞ்சி கடந்த சில வாரங்களாகத் தலைமறைவாக இருந்த ஷீலா மேரியை, பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், நேற்று அவர் பிடிபட்டார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஷீலா மேரியிடம் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி செய்த 20 கோடி ரூபாய் பணம் எங்கே மறைத்து வைக்கப்பட்டுள்ளது? அந்தப் பணத்தில் ஏதேனும் சொத்துக்கள் வாங்கப்பட்டுள்ளதா? அல்லது இந்தப் பின்னணியில் இன்னும் பெரிய அதிகாரிகள் யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஷீலா மேரி பல்வேறு மாவட்டங்களில் திருமண மண்டபங்கள் வாங்கி வைத்துள்ளது கண்டு பிடிக்கப்பட்டது.

‌விசாரணைக்கு பின்னர் ஆய்வாளர் ஷீலா மேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version