மதுரை மாவட்டம் வண்டியூரில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரே முகவரியில் 211 வாக்காளர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளதை சரி செய்து, சிஎஸ்ஆர் கணக்கெடுப்பில் முறைகேட்டை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜக கூட்டுறவு பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் மகா.சுசீந்திரன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மனு அளித்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியது: மதுரை மாவட்டம், கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட வார்டு 38, வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் அரசு புறம்போக்கு இடங்களில் வசித்த மக்கள், அப்பகுதியில் இருந்து 500-க்கும் மேற்பட்டோர் இடமாற்றம் செய்யப்பட்டு சக்கிமங்கலம், கல்மேடு, ராஜாக்கூர் போன்ற பகுதிகளில் 2 ஆண்டுகளுக்கு முன்பே குடியமர்த்தப்பட்டனர்.
தற்பொழுது வாக்காளர் சிறப்பு சீர்திருத்தம் மேற்கொண்டதில் இப்பகுதியில் உள்ள மக்கள் இடமாற்றம் செய்யப்பட்டும், அப்பகுதியில் உள்ள வீடுகள் இடிக்கப்பட்டும் சுமார் 1000 வாக்குகள் மீண்டும், வாக்குச்சாவடி எண். 337, 338 ஆகிய இரண்டு பகுதிகளில் இணைக்கப்பட்டுள்ளன. இதில், வாக்குச்சாவடி பாகம் எண். 337-ல் கதவு எண்.1இ என்ற முகவரியில் 115 வாக்காளர்களும், பாகம் எண் 338-ல் கதவு எண். 1 இ என்ற முகவரியில் 96 வாக்காளர்களும் என மொத்தம் 211 பேர் பதிவு செய்யப்பட்டுள்னர்.
இந்த 2 வாக்குச்சாவடிகளிலேயே இப்படி இருந்தால், இந்த தொகுதியில் மொத்தம் உள்ள 398 வாக்குச்சாவடிகளின் நிலை என்ன என்பது தெரியவில்லை. எனவே, மாவட்ட தேர்தல் அலுவலர் எஸ்ஐஆர் பணிகளை முறையாக மேற்கொள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மேலும் தேர்தல் ஆணையம் இதனை கவனத்தில் கொண்டு, இப்பகுதிகளில், முறையாக பணி செய்யும் அதிகாரிகளிடம் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
