சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயிலில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரை வசந்த உற்சவம் விழா, ஆனி மாதத்தில் ஆனி பிரம்மோற்சவ விழா, ஆடி மாதத்தில் ஆடி பிரம்மோற்சவம், புரட்டாசி மாதத்தில் நவராத்திரி திருவிழா, கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா, தை மாதத்தில் உத்தராயன புண்ணிய காலம் என ஆண்டுதோறும் பல்வேறு பிரம்மோற்சவங்கள் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் விமர்சையாக நடைபெறும்.

ஒவ்வொரு மாத பவுர்ணமிக்கும் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து கிரிவலம் மேற்கொள்வது வழக்கம்.

இந்நிலையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு கிரிவலத்திற்காக பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து நமசிவாய மந்திரத்தை உச்சரித்தபடி, பவுர்ணமி நிலவு ஒளியில் விடிய விடிய கிரிவலம் மேற்கொண்டனர்.

 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகளும், சிறப்பு ரயில்களும்  இயக்கப்பட்டன. இரண்டாவது நாளாக இன்றும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

சித்ரா பவுர்ணமிக்காக திருச்சி, விழுப்புரம், மன்னார்குடி, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி, திருப்பதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வழக்கமாக இயக்கக்கூடிய 24 ரயில்களுடன் சேர்த்து  8 சிறப்பு ரயில்களுடன் மொத்தமாக 32 ரயில்கள் மே 2-ம் தேதி வரை இயக்கப்பட உள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version