திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள வனத்துறை கட்டுப்பாட்டிலான சுற்றுலா இடங்களுக்கு, கடந்த ஜனவரி 12 முதல் ‘கியூஆர் கோடு’ மூலம் ஒரே இடத்தில் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டது. ஆனால், இந்த முறையால் குறிப்பாக விடுமுறை நாட்களில் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனை மாற்றி, பழைய முறையின்படி ஒவ்வொரு சுற்றுலா இடத்திலும் தனித்தனியாக கட்டணம் வசூலிக்க வேண்டும் எனக் கோரி, ஏப்ரல் 19ஆம் தேதி சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில், 5 நாட்களுக்குள் மாற்று நடைமுறை கொண்டு வரப்படும் என உறுதி அளிக்கப்பட்டதால், அந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.

இந்நிலையில் கோடை சீசன் காரணமாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து, கொடைக்கானல் நகரம் மற்றும் சுற்றுலா இடங்களில் மீண்டும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கட்டணம் வசூலிக்கும் தற்போதைய நடைமுறை காரணமாக, அந்த பகுதியை கடக்க 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. மலைச்சாலைகளில் 15 கிலோமீட்டர் தூரத்துக்கும் மேல் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் உருவாகியுள்ளது.

இந்த சூழலில், இன்று (01.05.2026) காலை சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு, சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தினர். இதனால் அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி, பலர் வாகனங்களிலேயே காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பை கருத்தில் கொண்டு, வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளில் மே 3ம் தேதி வரை வாகனங்களுக்கு இலவச அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, மே 2 மற்றும் 3ஆம் தேதிகளில் தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் உள்ளிட்ட இடங்களுக்கு கட்டணமின்றி செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 4 ம் தேதி முதல் கொடைக்கானலில் 5 இடங்களில் வரிசையில் நிற்காமல் ‘கியூஆர் கோடு’ மூலம் உடனடி டிக்கெட் பெறும் புதிய நடைமுறை அமல்படுத்தப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version