வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு, பெருமாள் கோயில்களில் கோலாகலமாக இன்று நடந்தது.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழா திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் கடந்த டிசம்பர் 19ம் தேதி துவங்கியது. தொடர்ந்து நடந்த பகல் பத்து நிகழ்ச்சியில் ஒவ்வொரு நாளும் எம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.
சிகர நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு இன்று நடந்தது. விரஜாநதி மண்டபத்தில் பெருமாள் வேத விண்ணப்பம் கேட்டருளினார். தொடர்ந்து காலை 5.45 மணிக்கு பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
பரமபத வாசலை கடந்த நம்பெருமாளை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களின் ரங்கா, ரங்கா கோஷத்தால் விண்ணதிர்ந்தது. ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாள் இன்று துவங்குகிறது.
இதேபோல் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோயில், திருப்பதி வெங்கடாசலபதி கோயில் உள்பட பல்வேறு பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமாளை தரிசித்தனர்.
