தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் ஜூன் 16ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனுவை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக தஞ்சையை சேர்ந்த சங்கர் தாக்கல் செய்த மனுவில், தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி மைதானத்தில் ஜூன் 16ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் நூற்றாண்டு விழா இங்கு நடைபெற்ற போது, அது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தேன்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு விழாக்களின் போது விளையாட்டு மைதானத்திற்கும், மரங்களுக்கும் எவ்விதமான பாதிப்பையும் ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் 16ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்காக மைதானப் பகுதியில் சாலை அமைப்பது போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்களை பாதிக்கப்படுவர்.
ஆகவே ஜூன் 16ஆம் தேதி நடைபெற உள்ள விழாவிற்கு தடை விதிப்பதோடு, விளையாட்டு நிகழ்வுகள் தவிர அரசின் வேறு கூட்டங்களை நடத்த அனுமதிக்க கூடாது என உத்தரவிடத் வேண்டும் என கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், அருள்முருகன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில், ” 1.75 ஏக்கர் நிலத்தை மட்டுமே அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2 மரங்கள் அகற்றப்பட்ட நிலையில், 4 மரங்கள் நடப்பட்டுள்ளன” தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், “நலத்திட்ட விழாவும் பொதுநலன் சார்ந்ததே. கல்லூரியின் மைதானத்திற்கும், மரங்களுக்கு எவ்விதமான பாதிப்பு ஏற்படவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
