துரித உணவுகளால் நிறைந்திருக்கும் நம் உணவுச் சந்தையில் இயற்கை உணவுகள் இப்போது மவுசு பெற்றுள்ளன. குறிப்பாக, பெருந்தொற்றுக் காலத்திற்குப் பிறகு பாரம்பரிய உணவுகளின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்துள்ளனர். இதுவே தரமான இயற்கை உணவு, சமையல் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்களையும் உருவாக்கியுள்ளது, அதே பெயரில் ஏமாற்றும் போலிகளையும் உருவாக்கியுள்ளது. அப்படி ஏமாற்றப்பட்ட குரல் ஒன்றுதான் அண்மையில் நடந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பரிதாபமாக ஒலித்தது.
தமிழ்நாட்டில் இன்று திரும்பிய பக்கமெல்லாம் உணவுக் கடைகள். பிரியாணிக் கடைகள், துரித உணவுக் கடைகள், பாரம்பரிய உணவுக் கடைகள் எனக் கொஞ்சூண்டு இடமிருந்தாலும் உணவுக் கடை போடலாம் என்ற தொழில் கலாசாரம் வளர்ந்திருக்கிறது. ஸ்விக்கி, சொமாட்டோ போன்ற செயலிகளின் உதவியால், கடை கூட வேண்டாம் வீட்டிலேயே கிளவுட் கிட்சன் ஏற்படுத்தி உணவுகளை விற்பனை செய்யலாம் என்ற அளவு உணவுச் சந்தை வளர்ந்துகொண்டே இருக்கிறது. இப்படி அசுர வளர்ச்சி காணும் இதே இடத்தில்தான் கலப்படம், போலி, ஏமாற்றுகளும் நடக்கின்றன. பரவிக் கிடக்கும் பாரம்பரிய உணவுக் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் அபாயம் குறித்து மருத்துவர்கள் ஒருபுறம் எச்சரிக்க, அதிக லாபம் ஈட்டும் வாக்குறுதிகளைக் கொடுத்து, இளம் தொழில்முனைவோர் ஏமாற்றப்படுவதாகவும் புகார்கள் எழுந்து இன்று சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியிருக்கிறது.
அதென்ன கருப்பட்டி காஃபி ஸ்கேம்?
தொழில்முனைவோர் ஆகிச் சாதிக்கும் வேட்கை இன்று பல இளைஞர்களுக்கு உருவாகியிருக்கிறது. அரசும் அதை ஊக்குவிக்கும் வகையில் பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. சிறந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவித்து, தொழில் தொடங்க முன்வரும் இளைஞர்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. இளைஞர்களின் தொழில் வளர்ச்சி நாட்டின் பொருளாதாரத்திற்கு இன்றியமையாத ஒன்றாகக் கருதப்படுகிறது. இதைக் குறிக்கோளாகக் கொண்டு என்ன செய்வது எப்படிச் செய்வது என்று புரியாமல் தவிக்கும் இளைஞர்களைத்தான் சில மோசடிக் கண்கள் குறிவைத்து ஏமாற்றுகின்றன.
விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா-வில் ஒரு பக்கம் உணவுக்கடை நடத்துபவர்களும், மறுபுறம் அந்தத் தொழிலைத் தொடங்கி ஏமாந்தவர்களும் கலந்துகொண்ட நிகழ்ச்சி நேற்று ஒளிபரப்பானது. அதில் பேசிய ஒருவர், இன்ஸ்டாகிராமில் இன்புளுயென்ஸர்கள் தரும் நம்பிக்கையில் தொழில் தொடங்கியதாகத் தம் சோகக் கதையைக் கூறினார்.
சென்னையின் மூலை முடுக்குகளை ஆளும் கருப்பட்டிக் காஃபி கடைகளில் ஒன்றை அவரும் போட்டிருக்கிறார். அதற்கு முன் அவர் பார்த்த விளம்பரத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் முதலீடு செய்தால் போதும், ஒரு லட்சம் ரூபாய் வரை மாதம் லாபம் பார்க்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. அதை நம்பி அவரும் கருப்பட்டி காஃபி கடையைப் போட்டிருக்கிறார். ஆனால் ரூ.10 லட்சம் வரை செலவு வைத்திருக்கிறது. பின்னால் தரம் குறைவான பொருட்களையும் கொடுத்திருக்கிறார்கள். இதனால் நஷ்டமடைந்தபோது எந்தவித உதவியும் செய்ய உரிமையாளர்கள் முன்வரவில்லை என்றும் கூறி கவலை தெரிவித்தார். பொதுவெளியில் இவர் இதனைத் தெரிவித்ததிலிருந்து இதுபோல் ஏமாற்றப்பட்ட பலரும் அவருக்கு ஆதரவுக் குரல் கொடுத்து வருகின்றனர்.
மருத்துவர்கள் கூறுவது என்ன?
கருப்பட்டி காஃபியோ, மரச்செக்கு எண்ணெய்யோ, நவதானிய உணவகங்களோ பாரம்பரியம் என்ற பெயரை வைத்துவிட்டால் மட்டுமே உடலுக்கு நல்லது என்றாகி விடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இன்று தொழிற்சாலையில் உணவுப்பொருள் தயாராகிறது என்றாலே அது உடலுக்குக் கெடுதல்தான் செய்யும் என்பது போன்ற பிம்பம் சமூக ஊடகங்களில் உருவாக்கப்பட்டு வருகிறது. அதுவே இயற்கை உணவுகளின் பெயரில் கலப்படமான பொருட்களை விற்கப்படுவதற்குக் காரணம் ஆகிறது என்கிறார்கள். கருப்பட்டி காஃபி என்ற பெயரில் வழங்கப்படும் காஃபிகள் பலவற்றில் வெல்லமும் வெள்ளைச் சர்க்கரையுமே அதிகம் கலக்கப்படுவதாக வாடிக்கையாளர்களும் புகார் அளித்துள்ளனர். ”உண்மையான மரச்செக்கு எண்ணெய்யாக இருந்தால், ஒரு மாதத்திற்குள் கெட்டுப்போய் விடும். எண்ணெய்யில் கொழுப்பைத் தவிர எதையும் நீண்ட காலத்திற்குப் பராமரிக்க முடியாது. இதனால்தான் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் விற்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் சுகாதாரமான நிலையில்தான் உணவுப் பொருட்கள் உருவாக்கப்படுகின்றன என்பதை ஏனோ நாம் பார்க்க மறுக்கிறோம்” என்கின்றனர் மருத்துவர்கள்.
எச்சரிக்கும் தொழில் ஆலோசகர்கள்
உலகத் தர நிறுவனமாக இருந்தாலொழிய பிரான்ச்சைஸ் எடுத்து சிக்கிக் கொள்ள கூடாது என்பதே தொழில் ஆலோசகர்கள் நீண்ட காலமாக வைக்கும் அறிவுரையாக உள்ளது. ஒரு நிறுவனக் கட்டமைப்பின் வெற்றி பெரும்பான்மையாக நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அதன் கிளைகளை எடுத்து நடத்த வேண்டும். அப்போதுதான் நஷ்டம் ஏற்பட்டாலும் பெரிய பாதிப்பு இன்றித் தப்பிக்கொள்ள முடியும் என அறிவுறுத்துகின்றனர். முக்கியமாக சமூக ஊடகங்களில் இன்புளுயென்ஸர்களை நம்ப வேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றனர். விளம்பர நிறுவனங்களைப் போலத்தான் சமூக ஊடக செல்வாக்கு மிக்கவர்களையும் கருத வேண்டும் என்று கூறுகின்றனர்.
பேராசை பெருநஷ்டம் என்ற பழமொழி இருப்பது உண்மைதான். ஆனால், வாழ்வில் தொழில்மூலம் நிலைத்துவத்தை அடைய முயலும் இளம் தொழில்முனைவோரை இதுபோன்ற மோசடிகள் கடுமையாக பாதிப்பது அவர்களின் நம்பிக்கையில் இடியாகவே இறங்குகிறது.