தி. நகரில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்கில் நேற்று இரவு பெட்ரோல் போட வந்த மருதம் கமாண்டோ ஃபோர்ஸ் படை காவலர் சக்திவேல் (27) மீது காரில் வந்த மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காவலர் சக்திவேல் அரசு வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காக வந்தபோது, ஷிஃப்ட் காரில் வந்த இரண்டு மர்ம நபர்கள் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அவர்கள் போன் செய்து மற்றொரு நபரை வரவழைத்து, காவலர் சக்திவேல் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தான் காவல்துறை என்பதை சக்திவேல் தெரிவித்த போதிலும், மர்ம நபர்கள் அவரை கொடூரமாகத் தாக்கி, அவதூறாகப் பேசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து காவலர் சக்திவேல் அளித்த புகாரின் பேரில், பாண்டிபஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதல் நடத்திய மர்ம நபர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.