மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜநாத் சிங், தனி விமானம் மூலம் டெல்லியிலிருந்து கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.
விமான நிலையத்தில், ஆதிதிராவிடத் துறை அமைச்சர் மதிவேந்தன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார், மாநகர காவல் ஆணையாளர் சரவணன் சுந்தர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மற்றும் பாதுகாப்புப் படை உயரதிகாரிகள் அவரை வரவேற்றனர்.
இன்று இரவு கோவை மாநகரில் உள்ள நேவல் ஆபீஸர் மெஸ் வளாகத்தில் அமைச்சர் ராஜநாத் சிங் தங்குகிறார்.
அமைச்சரின் மனைவி திருமதி. சாவித்திரி சிங் (வயது 72), உடல்நலக் குறைவு காரணமாக மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கங்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் அமைச்சரின் குடும்பத்தினர் கடந்த சில நாட்களாக இருந்து கவனித்து வருகின்றனர். இந்த நிலையில், மனைவியைப் பார்ப்பதற்காகவே மத்திய அமைச்சர் கோவை வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் வருகையையொட்டி, கோவை மாநகரில் காவல்துறையினரின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவை விமான நிலையம், அவிநாசி சாலை, லட்சுமி மில்ஸ் சந்திப்பு, மேட்டுப்பாளையம் சாலை, கவுண்டம்பாளையம் ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.