ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாகவே முன்பதிவு அட்டவணைகளை தயாரிக்க ரயில்வே வாரியத்திற்கு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக, மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போது ரயில் புறப்படுவதற்கு 4 மணி நேரத்திற்கு முன்புதான் முன்பதிவு செய்த பயணிகளின் அட்டவணை தயாரித்து வெளியிடப்படுகிறது என்றும், இந்த நடைமுறை பயணிகளுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்துள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு, அந்த நடைமுறையை மாற்றி ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே பயணிகளின் அட்டவணையை தயாரிக்க ரயில்வே வாரியம் ஆலோசனை வழங்கியது.
அந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பயணிகளுக்கு எந்த இடையூறும் இல்லாதவாறு இதை படிப்படியாக செயல்படுத்துமாறு ரயில்வே வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து இனி ரயில் புறப்படுவதற்கு எட்டு மணி நேரம் முன்பாகவே பயணிகள் அட்டவனை வெளியிடப்படவுள்ளது.
இதையும் படிக்க: ஜெய்சங்கர் 3 நாள் அமெரிக்க பயணம்.. குவாட் மாநாட்டில் பங்கேற்கிறார்!
இந்த நடவடிக்கை மூலம் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகள் தங்களுடைய டிக்கெட்டின் நிலையை முன்கூட்டியே தெரிந்துகொள்ள முடியும்.