விவசாயிகள் பயன்படுத்தும் நிலத்த நீருக்கு வரி விதிப்பு என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாமிகள் சங்கத்தின் சார்பாக கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
நிலத்தடி நீர் எடுப்பை முறைப்படுத்திடும் திட்டத்தை அமலாக்கிட 1,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதாக மத்திய நீர்ப்பாசனத் துறை அமைச்சர் (ஜல் சக்தி துறை ) ஹெச்.எம்.பாட்டீல், டெல்லியில் அறிவித்து உள்ளார். நிலத்தடி நீர் கட்டுப்பாடற்ற முறையில் வெளியே எடுத்து பயன்படுத்தப்படுகிறது. என இதை முறைப்படுத்திடும் முறையில் விவசாயிகள் சாகுபடிக்காக வெளியே எடுக்கும் நீரை அளவீடு செய்து விவசாயிகளுக்கு வரி விதித்திடவும், மாநில அரசுகளோடு இணைந்து இத்திட்டத்தை அமலாக்கிட 1600 கோடி ரூபாய் இதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் அறிவித்து உள்ளார்.
தமிழகத்தின் நீர் தேவை அண்டை மாநிலங்களை நம்பியே உள்ளது. தமிழகத்திற்கு தேவையான நீர் பங்கீடு பாதகமாக உள்ள நிலையிலும், வேளாண்மை உற்பத்தி பெருகி வருவதற்கு அடிப்படை நிலத்தடி நீர் பயன்பாடாகும். தேவைக்கு மேல் விவசாயிகள் எவரும் நிலத்தடி நீரை எடுப்பதில்லை. பயன்பாட்டுக்கு மேலாக நீரை எடுத்தாலும், அதனால் மோட்டார் உள்ளிட்ட மின்சாதன கருவிகள் பழுது பட்டு வீண் செலவு ஏற்படும் என்பது விவசாயிகளுக்கு தெரியும். நிலத்தடி நீரை மேம்படுத்தி சேமித்திட வேண்டும் என்ற அக்கறை விவசாமிகளுக்கும் இருக்கிறது.
நிலத்தடி நீரை சேமித்திடும் அக்கறை அரசுக்கு உண்மையாகவே இருந்தால் இருக்கும் நீர் நிலைகளை தூர்வாரி, மழை நீர் சேமிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்திட கடலுக்குச் செல்லும் ஆயிரக் கணக்கான டி.எம்.சி நீரை சேமிக்கும் கலன்களை உருவாக்கிவிடும் திட்டங்களை வகுத்திட நிதியை ஒதக்கீடு செய்யாமல் விவசாயிகளையே குறி வைத்து தாக்கிவிடும் செயலே ஒன்றிய அமைச்சரின் அறிவிப்பாகும். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நீண்ட நெடிய போராட்டங்கள், எண்ணற்ற விவசாயிகளின் இறப்பிற்கு பின் தான் தமிழ்நாட்டில் கட்டணமில்லா வேளாண் மின்சாரம் அமல்படுத்தப்படுகிறது. இதையும் துண்டித்திடவே ஒன்றிய அரசின் முன்னேற்பாடாகும்.
ஆகவே மத்திய அரசு உடனடியாக இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும். இதை தமிழ்நாட்டில் அமல்படுத்த மாட்டோம் என தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி கோவை மாவட்ட விவசாயிகளின் சார்பாக மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் எங்கள் கோரிக்கையை முன் வைக்கிறோம் என்றனர் விவசாயிகள்.
