உளுந்தூர்பேட்டையில் தன்னை திட்டமிட்டு விபத்து ஏற்படுத்தி கொலை செய்ய முயற்சி நடைபெற்றதாக மதுரை ஆதீனம் தெரிவித்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த மே மாதம் 2-ம் தேதி சென்னை காட்டாங்குளத்துரில் நடைபெற்ற அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து காரில் சென்ற போது, மற்றொரு கார் வேகமாக வந்து மோதியதாக கூறப்படுகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”நம்பர் பிளேட் இல்லதா காரில் வந்த குல்லா அணிந்த இருவர் என்னை கொலை செய்ய முயற்சித்ததாக” கூறினார். இந்த விவகாரம் முதலமைச்சர் கவனத்துக்கு சென்று, டிஜிபிக்கு உத்தரவிட, உடனே இந்த சம்பவத்தை விசாரிக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு டி.ஜி.பி உத்தரவிட, உடனே விசாரணையில் இறங்கிய போலீசார், அங்கிருந்த சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்ததில் மதுரை ஆதீனத்தின் கார்தான் அதிவேகமாக சென்று விபத்தினை ஏறடுத்தியதாக தெரிய வந்தது.
இரு மதங்களுக்கு இடையே மோதல் போக்கை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம் மீது சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜலிங்கம் என்பவர் சென்னை மாநகர ஆணையரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் மதுரை ஆதீனம் விசாரணைக்கு நேரில் ஆஜராக போலீசார் ஏற்கனவே சம்மன் அனுப்பி இருந்தனர்.
ஆனால் அவர் ஆஜராகவில்லை. இந்த நிலையில், விசாரணைக்கு காணொலியில் ஆஜராவதாக மதுரை ஆதீனம் தரப்பு வைத்த கோரிக்கையை காவல்துறை ஏற்க மறுத்துள்ளநிலையில், நேரில் ஆஜராக வலியுறுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னையில் (இன்று) ஜூலை 5-ந் தேதி ஆதீனம் ஆஜராக 2-வது முறை சம்மன் அனுப்பப்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு பதிலாக மடத்தின் செயலாளர் செல்வகுமார் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார். மேலும் மதுரை ஆதீனத்துக்கு வயது முதிர்வு காரணமாக காவல் நிலையம் வரமுடியவில்லை எனவும் ஆஜர் ஆக சிறிது கால அவகாசம் வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
