சினிமாவிலும் குரூப்பிசம் என்ற ஒன்று எப்போதுமே பின்பற்றப்படுகிறது. உதாரணத்திற்கு ஒரு ஜோடி நடித்த படம் வெற்றி பெற்று விட்டால் தொடர்ந்து அந்த ஜோடிக்கே முன்னுரிமை வழங்கப்படும். ஒரு காமெடி நடிகரின் நடிப்பு ரசிக்கப்பட்டால், அடுத்தடுத்த படங்களில் அவருடன் நடித்த அனைவரும் மீண்டும் குரூப்பாக நடிப்பார்கள். அந்தக் காலத்து விசு படங்களில், அவரது தம்பி, மற்றும் அவரது படங்களில் நடித்த நடிகர், நடிகைகள் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்து நடிப்பர்.
அதே பணி இன்றளவும் தொடர்கிறது. உதாரணத்திற்கு இயக்குநர் பா.ரஞ்சித் படங்களில் நடித்தவர்கள் தொடர்ந்து அவரது அடுத்தடுத்த படங்களிலும் நிச்சயம் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விடுவர். அப்படியாக நடிப்பவர்களுக்கு பிற இயக்குநர்கள் வாய்ப்பு தருவது சற்றே கடினம் தான். அதனை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகர் கலையரசன்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளியான மெட்ராஸ் திரைப்படம் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர் கலையரசன். தொடர்ந்து அவரது படங்களில் நடித்து வந்தார். பின் ஹீரோவாகவும், குணச்சித்ர நடிகராகவும் தற்போது வரை நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடித்துள்ள ’டிரெண்டிங்’ திரைப்படம் வரும் 18-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தமிழ்த் திரையுலகில் சாதிய பாகுபாடு மிக மோசமாக உள்ளது என்று பேசியுள்ளார். அதாவது, “தமிழ் திரைத் துறையில் சாதி இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால், சாதிய பாகுபாடு மிக மோசமாக உள்ளது. இயக்குனர் பா.ரஞ்சித்துடன் இருப்பதால் எனக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளன. சிலர் என்னை புறக்கணிக்கிறார்கள். என்னை நடிக்க அழைப்பதற்கு யோசிக்கிறார்கள்” எனக் கூறியிருக்கிறார். கலையரசனின் இந்த ஓபன் டாக் கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
