பாட்டாளி மக்கள் கட்சி வரும் ஜூலை 16-ஆம் நாள் 36 ஆண்டுகளை நிறைவு செய்து 37-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் பாமக தொண்டர்களுக்கு அன்புமணி கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதன் விவரம் வருமாறு..
பாமக தொடங்கப்பட்டு 36 ஆண்டுகள் ஆகியும் நம்மால் இன்னும் ஆட்சியைப் பிடிக்க முடியாமல் இருப்பது பெரும் குறையாகவும், வருத்தமாகவும் இருந்தாலும் கூட, தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமூகநீதிக்காகவும் நாம் ஆற்றிய பணிகள் தான் நமது மனதிற்கு நிறைவைத் தருகின்றன.
சமூகநீதி சாதனைகளையும் கடந்து, காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது, வேளாண் விளைநிலங்களை தொழில் பயன்பாட்டுக்காக கையகப்படுத்துதைத் தடுத்தது, பல கட்டப் போராட்டங்களை நடத்தி ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தைக் கொண்டு வரச் செய்தது, போதைப் பொருள்களின் நடமாட்டம் மற்றும் மதுவுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருவது, மின்கட்டண உயர்வுக்கு எதிராகவும், உழவர்களுக்கு கட்டுபடியாகும் கொள்முதல் விலை கிடைப்பதற்காகவும் பாட்டாளி மக்கள் கட்சி இடைவிடாமல் போராடி வருகிறது.
தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்ற வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையாக வேண்டும். அதற்கான நடவடிக்கைகளின் ஒரு கட்டமாகத் தான் பாமக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைத்தல் ஆகிய பணிகளைத் தொடங்கியிருக்கிறோம். கடந்த மே 30-ஆம் தேதி அந்தப் பணிகள் தொடங்கி ஒரு மாதம் நிறைவடைந்திருக்கிறது.
இதை பயன்படுத்திக் கொண்டு உறுப்பினர் சேர்க்கை, வாக்குச்சாவடி முகவர் குழுக்களை அமைக்கும் பணிகளையும் விரைந்து முடிக்க வேண்டும். மருத்துவர் அய்யா அவர்களின் பிறந்தநாளான ஜூலை 25-ஆம் நாள் முதல் தமிழ்நாடு நாளான நவம்பர் ஒன்றாம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன். 37-ஆம் ஆண்டு தொடக்கவிழாவை, அனைத்துக் கிளைகளிலும் குறைந்தது ஓர் இடத்திலாவது முறையான அனுமதி பெற்று கொடிக்கம்பம் அமைத்து பா.ம.க. கொடியேற்றி கொண்டாட வேண்டும்.
