மூன்றுவருட இடைவெளிக்குப் பிறகு சென்னை ஓபன் WTA250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இரண்டாவது சென்னை ஓபன் WTA250 சர்வதேச மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப்-2025 போட்டித் தொடரின் அறிவிப்பு நிகழ்ச்சி எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது,
மூன்றுவருட இடைவெளிக்குப் பிறகு இந்தத் தொடர் அக்டோபர் 27 முதல் நவம்பர் 2 வரை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. அண்மையில் டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் பெயரில் பார்வையாளர் மாடம் திறக்கப்பட்ட நிலையில், அங்கு போட்டிகள் நடைபெறுவது மகிழ்ச்சி.
நாம் தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தின் நூற்றாண்டை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இது நமது டென்னிஸ் வரலாற்றில் ஒரு மைல் கல். 12 கோடி ரூபாயை சென்னை ஓபன் போட்டிகளுக்கு ஒதுக்கி தொடர்ந்து முதலமைச்சர் ஆதரவளித்து வருகிறார், அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். மிகப்பெரிய விளையாட்டு தொடர்களை நடத்துவதன் மூலம் இன்று தமிழ்நாடு இந்தியாவில் முக்கியமான வளர்ந்த விளையாட்டு மையமாக திகழ்கிறது.
திமுக மாடல் அரசு எப்போதும் இந்திய வீரர்களின் திறனையை ஊக்குவிக்கும் வகையில் சர்வதேச போட்டிகளை நடத்தி வருகிறது. சமீபத்தில் கூட ஏடிபி சேலஞ்சர்ஸ் டூர் தொடருக்காக தமிழ்நாடு அரசு ஒரு கோடி ரூபாய் ஒதுக்கியது. இந்த ஆண்டு ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை, ஆசிய சர்ஃபிங் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது சென்னை ஓப்பன் போட்டியும் நடைபெற உள்ளது.
தரவரிசையில் 100 இடங்களுக்குள் உள்ள வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். போட்டியைக் காண ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். தரவரிசையில் முதல் 100 இடங்களில் உள்ள வீராங்கனைகள் இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளனர். இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை 2,39,33,170 ரூபாய் ஆகும்.