தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கடி ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் ரொக்கப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர். திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக அது கொண்டு செல்லப்பட்டதாக தகவல் பரவியது. ஆனால் இதனை அவர் மறுத்தார். முஸ்தபா என்ற கேன்டீன் உரிமையாளர் அது தன்னுடைய பணம் என உரிமை கொண்டாடி வந்தார். விசாரணையில் அது அவருடைய பணம் அல்ல என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த ஜுன் மாதம் 30-ந் தேதி சிபிசிஐடி போலீசார் சூரஜ் என்ற ஹவாலா தரகரை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி சூரஜ் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் அவருக்கு ஜாமின் தர எதிர்ப்பு தெரிவித்து சிபிசிஐடி போலீசார் பல்வேறு தகவல்களை தெரிவித்தனர்.
அதில் பாஜகவின் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகியும், கொரியன் ரெஸ்டாரன்ட் உரிமையாளருமான கோவர்தன் ஓட்டுநர் விக்னேஷ் என்பவர் மூலமாக தங்கக் கட்டிகளுக்கு பதிலாக 97.92 லட்சம் ரூபாய் பணத்தை சூரஜ் கைமாற்றியதாக விசாரணையில் அம்பலமானது
குறிப்பாக பாஜக நிர்வாகிகள் எஸ் ஆர் சேகர், கேசவ விநாயகம், கோவர்தன் ஆகியோர் நயினார் நாகேந்திரனுக்கு தேர்தலின் போது பணப்பட்டுவாடா செய்ய உதவியது கால் டேட்டா ரெக்கார்ட் மூலம் உறுதியானதாக சிபிசிஐடி நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது