மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தலைமை காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் அப்பன் திருப்பதி காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருபவர் பூபாலன். இவர் தேனியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் கடந்த 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். தனது கணவர் மற்றும் மாமனார் ஆகியோர் நாள்தோறும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமை படுத்துவதாக அப்பெண் புகார் தெரிவித்தார்.
அந்த புகாரில், திருமணத்தின் போது 60 சவரண் நகை, இருசக்கர வாகனம், சீர்வரிசை உள்ளிட்ட பொருட்களை வழங்கினோம். ஆனால் மேலும் வரதட்சணை கேட்டு கணவர் பூபாலன் தன்னை கடுமையாக தாக்கியதாக கூறியிருக்கிறார். கணவர் தாக்கியதில் காயமடைந்த அந்த ஆசிரியை, மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து ஆசிரியையின் பெற்றோரும் திருப்பதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் கணவர் பூபாலன், மாமனார் செந்தில்குமார் உள்ளிட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதில் பூபாலனின் தந்தை செந்தில்குமாரும் போலீஸ் இன்ஸ்பெக்டராக சாத்தூரில் பணியாற்றி வந்துள்ளார்.
இதற்கிடையே வரதட்சணை கேட்டு மனைவியை தாக்கியது குறித்து தனது சகோதரியிடம் காவலர் பூபாலன் சிரித்து சிரித்து பேசுவது போன்ற ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அதில், ”தனது மனைவியை நகத்தால் கீறியதாகவும், முகத்தில் காயல் ஏற்படுத்தி, தொண்டையை இறுக்கி, கால்களில் தாக்கி நடக்க முடியாமல் செய்தாகவும், உதட்டில் காயம் ஏற்படுத்தியதாகவும்” கூறியிருக்கிறார் பூபாலன்.
இந்த ஆடியோ போலீசாரின் உயர் அதிகாரிகள் வரை சென்ற நிலையில், பூபாலனை பணியிடை நீக்கம் செய்து மதுரை சரக டி.ஐ.ஜி., அபினவ் குமார் உத்தரவிட்டிருந்தார். இதேப் போல் வரதட்சணை கொடுமை புகாரில் அப்பெண்ணின் மாமனாரான இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரும் பணியிடை நீக்கம் செயப்பட்டார். இந்த நிலையில் தலைமை காவலர் பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.