கோவையில் தனது கள்ளக் காதலனுடன் சேர்ந்து வாழ இடையூறாக இருந்த குழந்தையை, தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் இருகூர் பகுதியை சேர்ந்தவர்கள் ரகுபதி-தமிழரசி தம்பதி. இவர்களுக்கு நான்கரை வயதில் அபர்ணாஸ்ரீ என்ற பெண் குழந்தை இருந்தது. ரகுபதி கடந்த சில மாதங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. அதனால் தமிழரசி, தனது குழந்தை அபர்ணாஸ்ரீயுடன் தனியாக வசித்து வந்துள்ளார்.
அத்தோடு சமூக வலைதளத்திலும் தன்னை ஆக்டிவாக வைத்திருந்த தமிழரசி, கட்டட வேலைக்கும் சென்று வந்துள்ளார். அவ்வாறு கட்டட வேலைக்கு செல்லும் இடத்தில், சக ஊழியரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வசந்த் என்பவருடன் சில மாதங்களாக பழகி வந்துள்ளார். அது நாளடைவில் காதலாக மாறியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 25-ம் தேதி அவரது நான்கரை வயது பெண் குழந்தை மர்மமான முறையில் உயிரிழந்தது.
இது குறித்து தகவலறிந்த போலீசார், தமிழரசியை விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்து சென்றனர். அப்போது அவர், அழுது கொண்டிருந்த குழந்தையை அடித்ததாகவும், அதனால் குழந்தை இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
தமிழரசி அளித்த வாக்குமுலத்தில், “எனது கணவர் பிரிந்து சென்ற பின்னர் வசந்த் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. வசந்தை திருமணம் செய்து, குடும்பம் நடத்த முடிவு செய்தேன். இதுகுறித்து அவரிடம் கூறியபோது, குழந்தை இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்றும், தனியாக வந்தால் ஏற்றுக்கொள்வேன் என்றும் கூறினார். இதனால் வேறு வழியின்றி குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்” எனக் கூறியிருக்கிறார்.
தொடர்ந்து வசந்தையும் கைது செய்த போலீசார், இருவரிடமும் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.