நெல்லையில் காதல் விவகாரத்தில் இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் போலீஸ் தம்பதி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் தெற்கு மாடவீதியை சேர்ந்தவர்கள் சந்திரசேகர்-தமிழ்செல்வி தம்பதி. ஒட்டப்பிடாரத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய மூத்த மகன் கவின், சென்னை துரைப்பாக்கத்தில் தகவல் தொழில்நுட்ப என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார்.
விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றிருந்த அவர், கடந்த 27-ம் தேதி தனது தாத்தாவை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை கே.டி.சி நகரில் உள்ள சித்தா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த நபர் ஒருவர், கவினை பேசுவதற்காக அழைத்து சென்று, அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் சரிந்த கவின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், கவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இன்ஸ்பெக்டர் காசி பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கொலை சம்பவத்தில் ஈடுபட்டது பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்த சுர்ஜித் என்பது தெரியவந்தது. இவருடைய தந்தை சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், தாய் கிருஷ்ணகுமாரி மணிமுத்தாறு பட்டாலியனிலும் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இதற்கு முன் தூத்துக்குடியில் வசித்து வந்த போது, சுர்ஜித்தின் அக்காவும், கவினும் ஒரே பள்ளியில் படித்து வந்துள்ளனர்.
இதனால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின் காதலாக மாறியுள்ளது. இந்த விஷயம் சுர்ஜித்தின் குடும்பத்திற்கு தெரியவர, ஆத்திரத்தில் சுர்ஜித் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. தொடர்ந்து சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் சுர்ஜித்தை போலீசார் கைது செய்தனர். அவர் அளித்த வாக்குமூலத்தில்,
“என்னுடைய அக்காளும், கவினும் பழகுவதை நானும், என்னுடைய பெற்றோரும் விரும்பவில்லை. இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கவினிடம் பலமுறை தொடர்பு கொண்டு என்னுடைய அக்காளுடன் பேசுவதை நிறுத்துமாறு எச்சரித்தேன். ஆனால் அவர் அதை பொருட்படுத்தவில்லை. அக்கா வேலை பார்க்கும் ஆஸ்பத்திரிக்கு கவின் வந்திருப்பதை தெரிந்து, அங்கு சென்றேன். அங்கிருந்த கவினிடம் பேசவேண்டும் என்று அழைத்து சென்றேன். அவரிடம் எனது அக்காளுடன் பழகுவதை நிறுத்துமாறு கூறினேன். ஆனால் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் ஆத்திரம் அடைந்த நான், மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவினை வெட்டிக் கொன்றேன்” என்று கூறியுள்ளார்.
இதற்கிடையே கவினின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் யாரும் முன்வரவில்லை. அத்தோடு அவரின் சொந்த ஊரில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். அதேப் போல் திருச்செந்தூர்-தூத்துக்குடி சாலையில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை கலைத்தனர்.
தொடர்ந்து கவினின் தாய் அளித்த புகாரின் பேரில், சுர்ஜித்தின் பெற்றோர் சரவணன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுர்ஜித், சரவணன், கிருஷ்ணகுமாரி ஆகியோர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
