வங்கி கடன் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகினார்.
இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் சகோதரரும், பிரபல தொழிலதிபருமான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் 2017-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை யெஸ் வங்கியிடம் வாங்கிய ரூ.3,000கோடி கடனை முறைகேடாக பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு பிரதிபலனாக யெஸ் வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் குழும நிறுவனங்கள் லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த மாதம் 24-ம் தேதி முதல் டெல்லி அமலாக்கத்துறையினர் மும்பையில் உள்ள ரிலையன்ஸ் குழும அலுவலகங்கள், அதிகாரிகள் தொடர்புடைய 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். 3 நாட்கள் நீடித்த இந்த சோதனையின் போது முறைகேடு தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேப்போல மேலும் சில வங்கிகள், நிதி நிறுவனங்களில் வாங்கிய கடனை வேறு பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதும் தெரியவந்தது. இந்த கடன் தொகை போலி நிறுவனங்களுக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. இவ்வாறு ரூ.10 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வங்கி கடன் பணத்தை முறைகேடு செய்தது தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அதன்படி, டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்தில் அனில் அம்பானி நேரில் ஆஜராகியுள்ளார். அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையின்போது வங்கி கடன், நிதி முறைகேடு தொடர்பான அவரின் வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்து வருகின்றனர்.