ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழ்நாட்டு வீராங்கனை இளவேனிலுக்கு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
16-வது ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தானில் உள்ள ஷிம்கெண்ட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீராங்கனை இளவேனில் 253.6 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கம் வென்றார்.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இளவேனில், உலகக் கோப்பை போட்டியில் பல தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியவர். ஆசிய சாம்பியன்ஷிப்பில் தனிநபர் பிரிவில் அவர் கைப்பற்றிய 2-வது தங்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இளவேனிலுக்கு பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
” 2025 ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவரின் அற்புதமான சாதனைகள் தமிழகத்தையும், இந்தியாவையும் பெருமைப்படுத்துகின்றன. இளவேனில் சாதனைகள், எதிர்கால சாம்பியன்களை ஊக்குவிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.