கர்நாடகாவில் வாக்குத் திருட்டு, பீகாரில் வாக்காளர்கள் நீக்கம் என இந்திய அரசியல் களம் அடுத்தடுத்து பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. மத்திய பாஜக அரசுடன் தேர்தல் ஆணையமும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக, எதிர்க் கட்சித் தலைவர் ராகுல் காந்தி முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகள் நாட்டையே அதிர வைத்துள்ளது. இவைகளுக்கு எதிராக பீகாரில் ராகுல் காந்தி நடத்திய பேரணியின் நீட்சியாக, தமிழக காங்கிரஸ் தரப்பிலும் மாபெரும் மாநாடு நடைபெறவிருப்பது பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதுகுறித்து இப்போது விரிவாக பார்க்கலாம்…
இந்திய அரசியலமைப்பு எப்பேற்பட்ட பெரும் ஆபத்தில் இருக்கிறது என்பதை சில வாரங்களுக்கு முன்னர் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டினார் ராகுல் காந்தி. கர்நாடக மாநிலம் மகாதேவபுரா தொகுதியில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் 5 வெவ்வேறு முறைகளில் திருடப்பட்டப்பட்டதாக அவர் முன்வைத்த குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்தது. முக்கியமாக தேர்தல் ஆணையத்தின் தரவுகளை வைத்தே வாக்கு திருட்டு நடைபெற்றிருப்பதை ராகுல் காந்தி சுட்டிக் காட்டியிருந்தார். பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையமும் இந்த முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக கூறிய ராகுல் காந்தி, இதேபோல்தான் மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், அரியானா மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2024 நாடாளுமன்றத் தேர்தல் ஆகியவற்றிலும் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
போலி வாக்காளர்கள், போலி முகவரிகள், ஒரே முகவரியில் பல வாக்காளர்கள், புகைப்படம் இல்லாத வாக்காளர்கள், Form 6-ல் முறைகேடு என விதவிதமாக வாக்குகள் திருடப்பட்ட விதம், எதிர்க் கட்சிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தின. இன்னொருபக்கம் மகாராஷ்டிராவில் நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் இடையே, அதாவது வெறும் 5 மாத இடைவெளியில் 1 கோடி வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிட்டு அனலை கிளப்பினார். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக அடுத்ததொரு பெரும் குற்றச்சாட்டை முன்வைத்தார் ராகுல் காந்தி. இன்னும் ஓரிரு மாதங்களில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம், பாஜக அரசுக்கு பேரிடியாக அமைந்தது.
பீகாரில் 2016ம் ஆண்டு பூரண மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வந்தது முதல், இதனை கொண்டு வந்த நிதிஷ் குமாருக்கு பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்தது. இங்கே இதனை குறிப்பிடக் காரணம், தற்போது நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களே. இதனால் தற்போது பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமாருக்கு, பெண்கள் மத்தியில் செல்வாக்கு குறைந்துவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. அதேநேரம் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் இருவருக்கும் பீகார் மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் பீகாரில் வாக்குத் திருட்டில் ஈடுபடாமல், வாக்காளர்களை நீக்கம் செய்து, அதன்மூலம் தேர்தலில் வெற்றிப் பெற பாஜக முயல்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
ஆனாலும் இத்தனை குற்றச்சாட்டுகளையும் துளியும் கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம், வாக்குத் திருட்டு குறித்து எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி தரும்படி ராகுல் காந்திக்கு கடிதம் அனுப்பியது. மேலும், ஆதாரம் இல்லையென்றால் தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது. இதற்கு பதிலடி கொடுத்த ராகுல் காந்தி, இந்த விவகாரத்தில் உண்மை என்னவென்று மக்களுக்குத் தெரியும், தேர்தல் ஆணையம் தனது தவறை ஒப்புக்கொள்ள வேண்டும் எனக் கூறியிருந்தார். இதனிடையே வாக்காளர் பட்டியல் முறைகேட்டை கண்டித்து, ராகுல் காந்தி தலைமையில் எதிர்க் கட்சி எம்பிக்கள் பேரணி நடத்தினர். பாராளுமன்ற வளாகத்தில் தேர்தல் ஆணையம் வரை பேரணியாகச் சென்ற ராகுல் காந்தி உள்ளிட்ட எம்பிக்களை போலீஸார் கைது செய்தனர்.
பீகாரில் வாக்காளர்கள் நீக்க முறைகேடுக்கு எதிராக ராகுல் காந்தி நடத்திய பேரணிக்கு மக்களிடையே பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. வாக்காளர் உரிமை யாத்திரை என்ற பெயரில் நடைபெற்ற இந்தப் பேரணியில், ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் ராகுலுடன் தொடர்ச்சியாக பயணித்தார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பீகார் பறந்து சென்று கூட்டத்தில் பங்கேற்று எழுச்சிஉரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், விகாஸ்ஷீல் இன்சான் கட்சித் தலைவர் முகேஷ் சஹானி, சிபிஐ (எம்எல்) லிபரேஷன் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, சிபிஐ(எம்) பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, சிபிஐயின் அன்னி ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.யூசுப் பதான், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோரும் ராகுலுடன் பேரணியில் கைக்கோர்த்தனர்.
பீகாரைத் தொடர்ந்து அடுத்தாண்டு தமிழகத்திலும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால், வாக்காளர்கள் நீக்கம், வாக்குத் திருட்டு போன்ற முறைகேடுகள் தமிழகத்திலும் அரங்கேறிவிடக் கூடாது என்பதில் திமுக அரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அதிக விழிப்புடன் உள்ளன. இதன் ஒருபகுதியாக தமிழக காங்கிரஸ் சார்பில், செப்டம்பர் 7ம் தேதி நெல்லையில் ‘வாக்குரிமை யாத்திரை விழிப்புணர்வு மாநாடு’ நடைபெறவுள்ளது. இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தனது எக்ஸ் தள பக்கத்தில் தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
மகாத்மா காந்தியை கொன்ற அந்தக் கொடிய கூட்டம் தான், இன்று இந்தியாவின் அரசியலமைப்பையே கொலை செய்யத் திட்டமிட்டு வருகிறது!
காந்தியின் இரத்தத்தில் கைகளை நனைத்த சிந்தனை, இப்போது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் இரத்தத்தையும் குடிக்கத் துணிகிறது.
இந்த நாட்டை சுதந்திரம் பெற்று தந்த மக்களின்… pic.twitter.com/sIa9Jn5Ynl
— Selvaperunthagai K (@SPK_TNCC) September 1, 2025
அதில், “மகாத்மா காந்தியை கொன்ற அந்தக் கொடிய கூட்டம் தான், இன்று இந்தியாவின் அரசியலமைப்பையே கொலை செய்யத் திட்டமிட்டு வருகிறது! காந்தியின் இரத்தத்தில் கைகளை நனைத்த சிந்தனை, இப்போது இந்த நாட்டின் ஜனநாயகத்தின் இரத்தத்தையும் குடிக்கத் துணிகிறது” என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், “இந்த நாட்டை சுதந்திரம் பெற்று தந்த மக்களின் போராட்டப் பலனை – அரசியலமைப்பை – கிழித்து எறிய அவர்கள் முயற்சி செய்கிறார்கள். அந்த அட்டூழியத்தை, அந்தத் துரோகத்தை, நாங்கள் உயிரோடு உள்ளவரை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்! அரசியலமைப்பை காப்பது, மக்களை காப்பது! அரசியலமைப்பை அழிக்க நினைப்பவர்கள் – நாட்டின் பகைவர்கள்! அவர்கள் எதிராக மக்கள் எழுந்து நிற்கும் நாள் நெருங்கிவிட்டது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “மக்கள் தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் நடைபெற்ற வாக்குரிமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சியில் கூறிய, ‘காந்தியை கொன்ற கூட்டமே இன்று அரசியலமைப்பை தகர்க்கிறது. அதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்’ என்ற கூற்றே, இன்று கோடிக்கணக்கான மக்களின் போர்க்குரலாக மாறியுள்ளது. அந்தப் போர்க்குரல் தமிழகம் முழுவதும் ஒலிக்கச் செய்யும் பொருட்டு, வரும் 7ம் தேதி திருநெல்வேலியில் ‘வாக்குரிமை யாத்திரை விழிப்புணர்வு மாநாடு’ நடைபெறுகிறது. அந்த மாநாட்டில் திரண்டுவரும் மக்கள் கூட்டம், அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் துரோகிகளுக்கெதிரான தமிழகத்தின் எச்சரிக்கை முழக்கமாக இருக்கும். ஆகையால், தமிழக மக்களே செப்டம்பர் 7 அன்று திருநெல்வேலிக்கு வாருங்கள்! கோபமாக வாருங்கள்! போராட்ட உறுதியுடன் வாருங்கள்! அரசியலமைப்பைக் காப்போம்! ஜனநாயகத்தைக் காப்போம்! இந்தியாவைக் காப்போம்!” என பதிவிட்டுள்ளார். இதனிடையே, “முதலில் வெளியிட்ட வாக்குத் திருட்டு வெறும் அணுகுண்டுதான்; விரைவில் அதைவிட சக்திவாய்ந்த ஹைட்ரஜன் குண்டு ஒன்றை போடவுள்ளோம்” என ராகுல் காந்தி அண்மையில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மிக முக்கியமான தருணத்தில் இந்திய ஜனநாயகத்தை மீட்கும் முயற்சியாக நடைபெறவுள்ள இந்த மாநாடு, தமிழக அரசியல் களத்திலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்