தவெக தலைவர் விஜய் வரும் 13ம் தேதி திருச்சியில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலை ஒட்டி திமுகவும், அதிமுகவும் தங்களின் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். இதேநேரம் தேர்தலுக்கு தயாராகி வரும் விஜய் பல கட்டங்களாக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நடத்தி மக்களின் மனநிலை, தொகுதி நிலவரம் மற்றும் பிரச்சாரம் தொடர்பாக தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இதேநேரம் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தும் கட்சி வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் மதுரை மாநாட்டை தொடர்ந்து கட்சி தொண்டர்களை உற்சாகப்படுத்த விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக கூறப்பட்டது. அந்த வகையில் வரும் 13ம் தேதியில் இருந்து திருச்சியில் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவார் என கூறப்படுகிறது. விஜய் மேற்கொள்ளும் இந்த தேர்தல் பிரச்சாரத்திற்கு “மக்கள் சந்திப்பு”என பெயரிடப்பட்டுள்ளது.
விஜய்யின் இந்த முதல் சுற்றுப்பயணம் ஒருவாரம் அல்லது 10 நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணத்தில் விஜய் ரோடு ஷோ நடத்த உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், விஜய்யும் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருப்பது தமிழக அரசியலில் கவனத்தை ஈர்த்துள்ளது.
விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பயணம் செல்லும் சொகுசு வாகனம் பனையூரில் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலானது.