செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு அதிலிருக்கும் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சிக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கடந்த சில மாதங்களாக எடப்பாடி பழனிசாமியுடன் விரோத போக்கை கடைபிடித்து வருகிறார். இதன் மூலம் அவர் அதிமுகவில் இருந்து விலகி விடுவாரோ என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து இன்று விளக்கமளிப்பதாக அவர் கூறியிருந்தார்.
அதன்படி, கோபியில் உள்ள கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எனக்கு 2 வாய்ப்புகள் கிடைத்தன. அதிமுக உடைந்துவிடக் கூடாது என்பதற்காக பல்வேறு தியாகங்களை செய்துள்ளேன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் வேட்பாளராக பரிந்துரைத்தவர் சசிகலா.
ஆட்சி மாற்றத்திற்கு அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க வேண்டும். தொண்டர்களின் உணர்வுகளை புரிந்தே இந்த கோரிக்கையை வலியுறுத்தி உள்ளோம். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். வெளியே சென்றவர்களை அரவணைத்தால்தான் நம்மால் வெல்ல முடியும் என்பது எம்.ஜி.ஆர் சொல்லிக்கொடுத்த பாடம்” என்றார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “அதிமுகவை ஒருங்கிணைக்கும் செங்கோட்டையனின் முயற்சி நல்ல முயற்சி. அதிமுக ஒருங்கிணைப்புக்கு தேவைப்பட்டால் நாங்கள் பேசவும் தயாராக உள்ளோம். அனைவரும் ஓரணியில் இணைவது நிச்சயம் நடக்கும். கடைசி ஒரு மாதத்தில் கூட நடக்கும். அரசியலில் எதுவும் நிரந்தரம் இல்லை. எல்லாரும் ஒற்றுமையாக இருந்தால் திமுக ஆட்சியை நிச்சயம்” எனக் கூறியுள்ளார்.
