இந்தியாவில் எல்லா வகையிலும் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்ந்தாலும், தொடரும் சாதிய ஆணவப் படுகொலை சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை. இதனால் ஆணவப் படுகொலைகளை தடுக்கும் விதமாக, தமிழக அரசு தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், அதனையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசு, சாதி வெறியர் என்ற சர்ச்சையில் சிக்கிய கே.கே.சி பாலுவுக்கு கலைமாமணி விருது அரிவித்துள்ளது பொதுமக்களிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கலை, சின்ன திரை, சினிமா ஆகிய துறைகளில் சாதனைப் படைப்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுப் பட்டியலில், கிராமியக் கலைகள் என்ற பிரிவில் கே.கே.சி பாலு என்பவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. கொங்கு மண்டலத்தில் வள்ளி கும்மி கலையை பிரபலப்படுத்தி வருவதற்காக கே.கே.சி பாலுவுக்கு இந்த கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனை திமுகவின் கூட்டணிக் கட்சியினர் உட்பட பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
முதலில் வள்ளி கும்மியாட்டம் என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்தினருக்கான கலையாக மட்டுமே பார்க்கப்படுவதாகவும், அதில் தங்களது சாதிய பெருமைகளை பாடுவதாகவும் விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. இதனை எப்படி பாரம்பரிய கலையாக எடுத்துக் கொள்ள முடியும் எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இரண்டாவதாக வள்ளி கும்மியாட்டத்தை பிரபலப்படுத்துவதற்காக கே.கே.சி பாலுவுக்கு இந்த விருது வழங்கப்படுவது மிகவும் ஆபத்தானது எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சில மாதங்களுக்கு முன்னர், கே.கே.சி பாலுவின் காணொலி ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிக கவனம் ஈர்த்த்தோடு கடும் அதிர்வலைகளையும் ஏற்படுத்தியது. அதில், இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும் வள்ளி கும்மியாட்டம் பயிற்சி வழங்கிய கே.கே.சி பாலு, அப்போது அவர்களை ஒரு உறுதிமொழியேற்க வைத்தார். அதாவது தனது சாதியை (கவுண்டர்) வெளிப்படையாக குறிப்பிட்டு, தான் சார்ந்த சாதிய சமூகத்திற்குள்ளேயே திருமணம் செய்துகொள்வேன் என, அங்கு பயிற்சிப் பெற்றவர்களை உறுதிமொழியேற்கச் செய்தார். கே.கே.சி பாலு பகிரங்கமாக இந்த உறுதிமொழியை மைக்கில் கூறியதும், பயிற்சிப் பெற்றவர்கள் முதல் அதனை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் வரை அனைவரும் விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.
அப்போதே கே.கே.சி பாலுவுக்கு எதிராக பல தரப்பில் இருந்தும் வன்மையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் எழுந்தன. இந்த நிலையில்தான், தமிழக அரசு தற்போது கே.கே.சி பாலுவுக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநிலப் பொருளாளரான கே.கே.சி பாலுவுக்கு, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர் ஒரு சாதிய பெருமைக் கொண்டவர், வள்ளி கும்மியாட்டம் என்ற பெயரில் தான் சர்ந்த சாதியை தூக்கிப் பிடிப்பதாக கண்டனங்கள் வலுத்ததை அடுத்து வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டார்.
அப்போது அதிரடியாக செயல்பட்ட திமுக அரசு, தற்போது 2026 தேர்தலை முன்னிட்டு சுய லாபத்துக்காக கே.கே.சி பாலுவுக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. முக்கியமாக திமுக கூட்டணியில் அங்க வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு, கே.கே.சி பாலுவுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். “வள்ளி கும்மியை முன்னெடுத்த கே.கே.சி பாலு என்பவருக்கு தமிழக அரசு கலைமாமணி விருது அறிவித்துள்ளது கவலையளிக்கிறது. வள்ளி கும்மி மூலம் வேறு சாதி ஆண்களை திருமணம் செய்துகொள்ள மாட்டோம் என சத்தியம் வாங்கும் சாதியவாதி பாலுவுக்கு இவ்விருது அறிவிக்கப்பட்டிருப்பது, சாதியத்தை ஊக்கப்படுத்தும் செயல். இந்த கலைமாமணி விருதை உடனடியாக திரும்பப் பெறுவதோடு, சாதியத்தை பரப்பி வரும் வள்ளி கும்மியை தடை செய்ய வேண்டும்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழகத்தில் நிகழும் ஆணவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என, விசிக தலைவர் தொல் திருமாவளவன் உட்பட திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். அதற்கெல்லாம் செவி மடுக்காத தமிழக அரசு, சாதியத்தை ஊக்குவிக்கும் கே.கே.சி பாலுவுக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது, சமூக ஊடகங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. “சனாதன பாஜக, தமிழகத்தில் நுழையும் அபாயத்தை தடுக்க பெரியாரிய பாதையில் பீடுநடை போடும் திமுக அரசு, வள்ளி கும்மியை சாதியமாக பார்க்காமல், கிராமிய கலை என்று அங்கீகரித்து கலைமாமணி விருது அறிவித்துள்ளது வேதனையானது” என கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல், தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் கலைமாமணி போன்ற விருதுகளின் பின்னணி குறித்தும் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஏற்கனவே ஒருமுறை சாதியவாதி என்ற சர்ச்சையால் நாடாளுமன்ற வேட்பாளர் சீட் மறுக்கப்பட்ட ஒருவருக்கு, கலைமாமணி விருது அறிவிக்கும் போது, மீண்டும் அது விமர்சனத்துக்குள்ளாகும் என தமிழக அரசுக்கு தெரியாதா.? அப்படித் தெரிந்தும் இப்படி விருது அறிவிக்கப்பட என்ன காரணம்.? கே.கே.சி பாலு தரப்பில் இருந்து, அரசு அதிகாரிகளிடம் லாபி செய்தோ அல்லது பணம் கொடுத்தோ இந்த விருது அறிவிக்கப்பட்டதா.? என அடுக்கடுக்காக பல கேள்விகளை முன்வைத்து, விமர்சனங்கள் எழுந்துள்ளன. அல்லது தனது தேர்தல் சுய லாபத்திற்காக திமுக அரசு இந்த விருதை கே.கே.சி பாலுவுக்கு வழங்குவதாக இருந்தால், விசிக உட்பட கூட்டணிக் கட்சிகளின் நிலைபாடு என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என, பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.