தேசிய மற்றும் சர்வதேச அளவில் பதக்கம் வென்ற வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி ஊக்கத் தொகையை வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேசிய மற்றும் சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். 819 விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு ரூ.21.40 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற ஆனந்த்குமாருக்கு ரூ.1.80 கோடியும், செஸ் வீரங்கனை வைஷாலிக்கு ரூ. 75,000 ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. இதில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் மகள் நிலா ராஜா துப்பாக்கிச்சுடுதலில் வெற்றிப்பெற்றதால் அவருக்கு ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பேசிய துணாஇ முதலமைச்சர், நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு விழா நடைபெற்ற. காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் என கல்வித்துறை சார்ந்த அரசின் திட்டங்கள் குறித்து பேசப்பட்டது. அந்த அரங்கில் விளையாட்டு துறைக்கும் சிறிது இடம் கொடுத்து நமது வீரர்கள் சிலரும் அங்கே இருந்தனர்.
அந்த நிகழ்ச்சியை பார்க்கும்போது எனக்கு பொறாமையாக இருந்தது. எல்லோரும் படித்தவர்களாக இருக்கிறார்களே, எல்லோரும் படித்து வெற்றி பெற்றவர்களாக இருக்கிறார்களே ,விளையாட்டில் உள்ளவர்கள் குறைவாக உள்ளனர் என்று தோன்றியது. ஆனால் இன்று இந்த அரங்கில் விளையாட்டில் வெற்றி பெற்றவர்கள் நிறைந்து இருக்கிறார்கள் அதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
விளையாட்டுத் துறையில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக தமிழகம் தான் உள்ளது என்பதை அடித்து சொல்லலாம். திமுக ஆட்சி பொறுப்பேற்ற நான்கரை வருடத்தில் 4510 வீரர்களுக்கு 150 கோடி ரூபாய் ஊக்கத்தொகையாக முதலமைச்சர் வழங்கி உள்ளார். 4 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் விளையாட்டு வீரர்களுக்கு இந்த அளவு ஊக்கத்தொகை வழங்கப்படவில்லை.
வீரர்களுக்கு பயனளிக்கும் வகையில் திட்டங்களில் கூடுதல் அரசின் திட்டங்கள் சென்று சேரும் வகையில் வீரர்களை கூடுதலாக சேர்க்க வேண்டும் என முதலமைச்சர் இடம் கடந்த மாதம் கோரிக்கை வைத்தோம். ஏற்கனவே இருந்த எண்ணிக்கையை விட இரண்டு மடங்காக உயர்த்தி முதலமைச்சர் ஆணையிட்டார். போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு தான் அரசு அங்கீகாரம் கொடுக்கும் பரிசுத்தொகை கொடுக்கும். ஆனால், நமது அரசு போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்பே அவர்களுக்கான ஊக்க தொகையை நிதி உதவியை வழங்குகிறது. வீரர்களின் விடாமுயற்சியும் நமது விளையாட்டு துறையின் பக்கபலமும் சேர்ந்து நல்ல முடிவுகளை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
இத்துடன் நிறுத்தி விடாமல் தினமும் பயிற்சி செய்ய வேண்டும் வெற்றி பெற வேண்டுமென்றால் பொறுமை மிக மிக அவசியம் பொறுமையையும் முயற்சியையும் கைவிடாமல் தொடர்ந்து பயிற்சி செய்து கொண்டே இருங்கள் முயற்சி செய்து கொண்டே இருங்கள். உங்களது இலக்கில் மட்டும் குறிக்கோளாக இருங்கள் விளையாட்டுத்துறை அமைச்சராக இதை நான் சொல்லவில்லை உங்களது சகோதரனாக சொல்கிறேன். நீங்கள் உங்களது குறிக்கோளை அடைவதற்கு முதலமைச்சர் அவர்களும் விளையாட்டு துறையும் உற்றத்துணையாக இருக்கும். அரசின் திட்டங்களை பயன்படுத்தி ஆடுகளத்தில் மட்டுமல்லாமல் உங்களது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென வாழ்த்துகள் என பேசியுள்ளார்.