கட்டமைப்பு வசதிகள் இருந்தால் இரவிலும் பிரேத பரிசோதனை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் 3ஆம் கட்ட பயணமாக நாமக்கல் மற்றும் கரூர் ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டார்.
பிரசார பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு பல்வேறு தரப்பினரும் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்றிரவு கூராய்வுக்கு உட்படுத்தப்பட்டது.
இதனால், மாலை 6 மணிக்கு மேல் இறந்தவர்களின் உடலை கூராய்வு செய்யக்கூடாது என்ற விதி உள்ளது என்றும், உண்மையை மறைக்கவே தமிழ்நாடு அரசு அவசர அவசரமாக உடற்கூராய்வு செய்வதாகவும் தவெக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் குற்றம் சுமத்தி வந்தனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு தகவல் சரிபார்ப்பகம் கூறுகையில்’ “கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக் கு மேல் பிரேத பரிசோதனை செய்யக் கூடாது’ என்று விதிமுறைகள் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.
2021 நவம்பர் 15ம் தேதி ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட அலுவலகக் குறிப்புரையில், இரவு நேரங்களில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும், அதற்கு விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்காக மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்வதற்கான கட்டமைப்பு வசதிகள் இருந்தால் போதுமானது என்று இக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நிலையிலும் இரவில் பிரேத பரிசோதனை செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை செய்ய முடியாது என்று சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்பப்படுகிறது” என விளக்கம் அளித்துள்ளது.