நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது என்றும், நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது என்றும் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் குறித்து நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.
பொதுக் கூட்டங்கள், பிரச்சாரங்கள் நடைபெறும்போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பி.ஹெச்.தினேஷ் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் இன்று (அக்.3) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், “வீடியோக்கள் பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது?
அனைத்தும் நடைபெற அனுமதித்துள்ளீர்கள். நடிகர் விஜய் பயணித்த பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகின. இதுசம்பந்தமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதா? வழக்குப் பதிவு செய்ய என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிய வேண்டும்
நீதிமன்றம் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது. நீதிமன்றம் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. மொத்த உலகமே இதற்கு சாட்சி.
நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்கள், தலைவர் முதல் அனைவரும் சம்பவம் இடத்தில் இருந்து மறைந்து விட்டனர். அவர்களுடைய தொண்டர்களை விட்டு விட்டார்கள். பின் தொடர்ந்தவர்களை விட்டு விட்டார்கள். இந்த நிகழ்ச்சியின் தலைவர் மொத்தமாக மறந்து விட்டார். தலைமைத்துவ பண்பே இல்லை” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.