கரூர் தவெக பிரச்சாரப் பரப்பரை கூட்ட நெரிசல் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் மத்திய மாநகர பொறுப்பாளர் பவுன்ராஜ் ஆகியோரை கைது செய்த போலீசார் இன்று கரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் பரத் முன்பு ஆஜர் படுத்தினர். அப்போது, இருவரையும் பார்த்த நீதிபதி, உங்களை எதற்காக கைது செய்து உள்ளார்கள், நீங்கள் கைது செய்யப்பட்டது உங்கள் குடும்பத்தினருக்கு தெரியுமா, போலீசார் உங்களை தாக்கினார்களா என கேட்டார்.
தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், கரூரில் நடந்த உண்மைகளை டாக்குமெண்டாக தாக்கல் செய்வதாகவும், உண்மை தன்மையை அறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தவெக தரப்பில் கூறப்பட்டது. அப்போது குறுக்கிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், அருணா ஜெகதீசன் விசாரணையில் உள்ளதால் அதில் நடந்த உண்மை தன்மை தெரிய வரும் என்றார். தொடர்ந்து வாதாடிய தவெக தரப்பினர், கரூர் மாவட்டத்தில் சம்பவம் நடந்த அன்று சம்பள நாள் யாரும் வரமாட்டார்கள் என்று கணித்ததாக விளக்கம் அளித்தனர். அப்போது குறுக்கிட்ட போலீஸ் தரப்பு, பிரச்சாரம் நடந்த இடத்தில் இதற்கு முன்பாக அதிமுக பிரச்சாரம் செய்தது கூடுதலாக வாகனங்கள் வந்தது. அதனால் வேலுச்சாமிபுரத்தை பிரச்சாரத்திற்கு இடத்தை கொடுத்ததாக தெரிவித்தனர்.
இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, விஜய்யை பார்க்க அனைத்து தரப்பு மக்களும் வருவார்கள், நீங்க கேட்ட மூன்று இடமுமே பத்தாது. காலாண்டு விடுமுறை, வாரவிடுமுறை நாள் ஏன் குறைந்து வருவார்கள் என்று கணக்கிட்டீர்களா? விஜயை பார்க்க குழந்தைகள் வருவார்கள், அதற்கு தகுந்த இடத்தை கேட்டிருக்க வேண்டுமே, பிரச்சாரத்திற்கு மைதானத்தை ஏன் கெட்கவில்லை, கூட்ட நெரிசலில் மக்கள் தங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளவே ஓடுவார்கள், அதிக கூட்டம் வரும் என்று விஜய்க்கு ஏற்கெனவே தெரியுமா? அவரிடம் சொல்லப்பட்டதா? என நீதிபதி கேட்டார்.
அப்போது பேசிய காவல்துறை தரப்பினர், விஜய் தரப்பினர் கரூர் பாலத்தில் இருந்து வேண்டும் என்றே தாமதமாக வந்தனர், வேகமாக வர சொல்லியும், ராங் ரூட்டில் சென்றனர். பிரச்சாரத்தின் போது புஸ்ஸி ஆனந்த் வாகனத்தை நிறுத்தி முனுசாமி கோவிலில் தாமதம் செய்தனர். முனியப்பன் கோயில் பகுதியில் கேரவன் உள்ளே விஜய் சென்று விட்டார் அவரை பார்த்திருந்தால் கூட்டம் கலஞ்சிருக்கும், பிரச்சார வாகனம் குறிப்பிட்ட இடத்தை வந்தவுடன் போதும் என்றோம். ஆனால் ஆதவ் அர்ஜூனா இன்னும் முன்னே செல்ல வேண்டும் என்றார். தவெகவினர் சொன்னப்படி நேரத்தை கடைப்பிடிக்கவில்லை. வாகனம் முன்னதாக பிரச்சாரம் செய்ய நிறுத்திய இடத்தில் மேலே இபி லைன் இருந்தது. அதனால் வாகனம் முன்னே சென்றபோது தான் இந்த நெறிசல் சம்பவம் நடந்தது என விளக்கம் அளித்தனர்.
இந்த வாதத்தை கேட்ட நீதிபதி, தவெக தரப்பை பார்த்து, விஜயை பார்க்க பத்தாயிரம் பேர் மட்டும்தான் வருவார்கள் என்று எதை வைத்து கூறினீர்கள்? என்றபோது, காவல்துறையினர் சரியான பாதுகாப்பு அளிக்கவில்லை, அசாதாரண சூழல் இருந்தால் பிரச்சாரத்தை நிறுத்தியிருக்கலாம் என்று நிபந்தனை உள்ளபோது போலீசார் அதை ஏன் செய்யவில்லை என தவெக தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், பிரச்சாரம் நடந்த இடத்தில் உள்ள சாக்கடை குழி வெறும் அட்டை வைத்தே அடைக்கப்பட்டிருந்ததாகவும், அந்த இடத்தை சீர் செய்து தரவில்லை என்றும், அதிக கூட்டம் வரும் என்று போலீசுக்கு தெரிந்தும் அவர்கள் கட்டுப்படுத்தவில்லை என்று குற்றம்சாட்டினர்.
மேலும், காசு கொடுத்து வண்டி வைத்து நாங்கள் யாரையும் அழைத்து வரலை பொதுமக்கள் தன்னெழுச்சியாக அங்கு கூடினர் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தவறிவிட்டது. போலீசாருக்கு ஏற்கனவே இவ்வளவு கூட்டம் வரும் என்று தெரிந்துள்ளது, இதற்கு அரசாங்கமும் அரசு அதிகாரிகளும் பொறுப்பு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகின்றோம் என தவெகவினர் வாதிட்டனர்.
தவெகவுக்கு எதிராக வாதிட்ட போலீசாரோ, அனுமதி கேட்கும் போது தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அந்த இடத்தை திருப்தியாக உள்ளது என்று கூறினாரே, அப்போதே வேண்டாம் என்று சொல்ல வேண்டியதானே என வாதிட்டபோது குறுக்கிட்ட தவெக தரப்பு, பிரச்சாரம் நடைபெற்ற சாலையில் உள்ள சென்டர் மிடியன் எடுக்காதது காரணம் விஜயின் பேருந்தை நடுவே நிறுத்தி பேசுவார் என்பதால் எடுக்கவில்லை, விஜய் பிரச்சார வாகனம் நின்ற இருபுறமும் தான் பாதிப்பு, சாலையில் நடுவே உள்ள தடுப்பை எடுத்துக் கொடுத்து இருந்தால் சுலபமாக இருந்திருக்கும் என்றனர்.
இதற்கு பதிலளித்த போலீஸ் தரப்பு, விஜய் பேருந்து நின்ற பகுதியை விட அதற்கு எதிர் திசையில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகம் என்றனர்.
இருதரப்பு வாதத்தை கேட்ட நீதிபதி, மக்கள் கூட்டம் குறித்து தவெக நிர்வாகிகள் யாரும் தகவலை உங்கள் தலைவருக்கு சொல்லவில்லையா? இரண்டு பக்கமும் கூட்டம் வந்துவிட்டது ஏன் அங்கே நிறுத்தவில்லை? கூட்டம் அளவை கடந்து சென்றது என்று தெரிந்தும் நிர்வாகிகள் ஏன் பிரச்சாரத்தை நிறுத்தவில்லை? உங்கள் கட்சி தலைவரை முதல்வருடனோ மற்ற கட்சி தலைவர்களுடனோ ஒப்பிட வேண்டாம், அவர் டாப் ஸ்டார் அப்படி இருக்கையில் பத்தாயிரம் பேர் வருவார்கள் என்று எப்படி கணித்தீர்கள்? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.செங்குன்றம்