பீகாரில் 121 தொகுதிகளில் நடைபெற்ற முதற்கட்ட வாக்குப்பதிவு பெரிய அளிவில் வன்முறையின்றி அமைதியாக நிறைவடைந்தது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என கடந்த மாதம் தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான நாள் முதல் ஒட்டுமொத்த இந்தியாவின் கவனத்தையும் கடந்த 40 நாட்களாக பீகார் மாநிலம் தன்வசப்படுத்தியிருந்தது. குறிப்பாக அரசியல் கட்சி தலைவர்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில், பல்வேறு வகையான வாக்குறுதிகளை வழங்கி பொதுமக்கள் திக்குமுக்காட வைத்தனர்.
குறிப்பாக ஆளும் ஜக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணியினர் ஒரு கோடி பேருக்கு வேலை, கல்வித் உதவித் தொகை, புதிய மெட்ரோ ரயில் நிலையங்கள் என பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினர். அவர்களுக்கு சிறிதும் குறைவில்லாது, ஆர்ஜேடி-காங்கிரஸ் சார்பிலும் பல்வேறு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, வீட்டுக்கு ஒருவருக்கு அரசு வேலை, பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.30 ஆயிரம், விவசாயிகளுக்கு கடன் உதவி என வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.
இந்நிலையில், மிகுந்த பாதுகாப்புக்கு நடுவே இன்று கலை 7 மணிக்கு 121 தொகுதிகளிலும் முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு காலை தொடங்குவதற்கு முன்பே பல வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்தனர். தொடர்ந்து வாக்குப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் ஆர்வமாக தங்களின் வாக்குகளை செலுத்தினர்.
காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வநத நிலையில், 11 மணி அளவில் 27.65% வாக்குகள் பதிவானது. தொடர்ந்து மதியம் 1 மணி அளவில் 43.31% வாக்குகள் பதிவாகின. தொடர்ந்து மதியம் மூன்று மணி அளவில் 53.77% வாக்குகள் பதவானது.
பல வாக்குச்சாவடிகளில் மக்கள் வாக்களிக்க வரிசையில் நிற்பதால், 6 மணிக்கு முன்பு வந்தவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. டோக்கன் வாங்கியவர்கள் 6 மணியை கடந்தும் வாக்களிக்கலாம் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரவு 8 மணிக்கு மேல் முதற்கட்ட தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு சதவீதம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் பெருவாரியான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. சில இடங்களில் லேசான வாக்குவாதங்கள் ஏற்பட்ட நிலையில், துணை ராணுவம் நிலைமையை சீர் செய்தது. குறிப்பாக அம்மாநில துணை முதல்வர் விஜய் சின்ஹா கார் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். போலீசார் உடனடியாக துணை முதல்வரை பாதுகாப்பாக வெளியேற்றினர். பெரிய அளவிலான வன்முறைகள் இன்றி வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது.
முதற்கட்ட தேர்தலில் மொத்தம் 1,314 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில் 3.75 கோடி பேர் வாக்களிக்கும் உரிமையை பெற்றுள்ளனர். குறிப்பாக, இந்த தேர்தலில் 7.38 லட்சம் பேர் முதல் தலைமுறை வாக்காளர்களாக உள்ளனர். மேலும், முசாபர்பூர் மற்றும் குர்ஹானி தொகுதிகளில் அதிகபட்சமாக 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அங்கு இரண்டு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டன.அதே நேரத்தில் போரே, பர்பட்டா, அலாவுலி தொகுதிகளில் தலா ஐந்து பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.
முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மொத்தமுள்ள 121 தொகுதிகளில் 57 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. அதன் முக்கிய கூட்டணி கட்சியான பாஜக 48 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மேலும், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சி 14 இடங்களில் களம் காண்கிறது. மேலும், எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் சார்பாக 73 தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். காங்கிரஸ் 24, சிபிஐஎம்எல் 14, சிபிஐ 5 இடங்களில் போட்டியிட்டுள்ளனர்.
