டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்துள்ள கார் வெடிவிபத்து தலைநகரையே பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.
தலைநகர் புது டெல்லியிலுள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில்நிலைய வாயில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களில் இருந்த மர்மப்பொருள் வெடித்து சிதறியது. திங்கட்கிழமையான இன்று சரியாக இரவு 6.55 மணிக்கு இந்த வெடி விபத்து நிகழ்ந்துள்ளதுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், அருகிலுள்ள எல்.என்.ஜே.பி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட காயமடைந்தவர்களில் தற்போதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவித்துள்ளது. உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. வெடிவிபத்து சம்பவத்தின் போது அடுத்தடுத்து மூன்று முறை வெடி சத்தங்கள் கேட்டதாக அப்பகுதியில் இருந்தவர்கள் கூறியுள்ளனர். வெடி விபத்தால் தீப்பிடித்து எரிந்த வாகனங்களின் தீயினை தீயணைப்பு துறையினர் விரைவாக செயல்பட்டு அணைத்துள்ளனர். அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் நடந்த இடத்திற்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விரைந்துள்ள நிலையில், வெடிவிபத்து குறித்த முதற்கட்ட தகவல்களை டெல்லி காவல்துறையிடம் கேட்டுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம். தொடர் விசாரணைகளின் போது விபத்திற்கான காரணம்? யார் இதை செய்தது? உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
