வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளதால், சென்னை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கை கடலோர பகுதிக்கு அப்பால், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், 15ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, அதே இடத்தில் நீடிப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில், இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு, வடமேற்கு திசையில், தமிழகம் நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய 7 மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழைக்கான ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 8 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரிரு இடங்களில் லேசானது முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
