சவுதி அரேபியாவில் டீசல் டேங்கர் லாரி மீது சொகுசுப் பேருந்து மோதிய விபத்தில் இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
சவுதி அரேபியாவுக்கு உம்ரா புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் மெக்காவில் இருந்து மதீனாவுக்கு சொகுசுப் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். இந்தநிலையில், அதிகாலை சுமார் 1.30 மணியளவில் மதீனா அருகே டீசல் டேங்கர் லாரி மீது புனிதப் பயணம் சென்றவர்கள் சொகுசுப் பேருந்து மோதி பயங்கர விபத்து நிகழ்ந்துள்ளது. அதிகாலை நேரம் என்பதால், பேருந்தில் இருந்தவர்கள் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தநிலையில், விபத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததன் காரணமாக இந்தியர்கள் 42 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில், 20 பெண்கள், 11 குழந்தைகள் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த பெரும்பாலானவர்கள் பயணம் மேற்கொண்டதாக தெரிகிறது. விபத்தில் சிக்கியவர்கள் குறித்து தகவல்களை சேகரிக்க தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைவருக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். சவுதி அரேபிய அதிகாரிகள், வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரிகளிடம் விவரங்களை சேகரிக்குமாறு டெல்லியில் உள்ள அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளதாக தெலங்கானா முதலமைச்சர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
