தேவயானிக்கு பதில் விஜயலட்சுமி வந்திருக்கலாம். அப்படி வந்திருந்தால் நல்ல ப்ரோமோஷனாக இருந்து இருக்கும் என, விஜயின் ‘ப்ரண்ட்ஸ்’ படம் ரீ ரிலீஸ் விழாவில் இயக்குநர் பேரரசு பேசினார்.
சித்திக் இயக்கத்தில் விஜய், சூர்யா, வடிவேலு, தேவயானி, ரமேஷ் கண்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான ப்ரண்ட்ஸ் திரைப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படம் நவம்பர் 21 ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆக உள்ள நிலையில் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தனியார் அரங்கில் டிரெய்லர் மற்றும் பாடல் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்த திரைப்படத்தை தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் வெளியிடக் கூடிய விநியோகஸ்தர்கள், படத்தில் பணியாற்றிய ரமேஷ் கண்ணா மற்றும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் நடிகர் ரமேஷ் கண்ணா பேசியதாவது:
ஒரு திரைப்படம் மீண்டும் ரிலீசாவதற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைப்பது மகிழ்ச்சியானது. ரொம்ப அற்புதமான ஒரு படம் இது. நிறைய விஷயங்களை சொல்வதற்கு இருக்கிறது. முதலில் இயக்குநர் சித்திக்கிடம் நானும் வசன கர்த்தாவாக இருந்திருக்கிறேன். அவர் வைத்திருக்கும் டயலாக்குகளை தாண்டி எதுவும் பேச முடியாது. ப்ரண்ட்ஸ் படம் முழுவதும் அவரின் டயலாக் மட்டுமே அதில் இடம் பெறும். இருப்பினும் அதற்கு விதிவிலக்காக நான் அந்த படத்தில் பேசியிருக்கக் கூடிய வசனமானது, ”ஆடு ஓடுது, மாடு ஓடுது” டயலாக் மட்டும் ஸ்கிரிப்ட் இல்லாமல் நானே பேசியதற்காக அவர் என்னை திட்டினார். இருப்பினும் வேறு வழி இல்லாததால் படத்தில் வைத்தார்.
இந்த படப்பிடிப்பு என்னால் மறக்க முடியாதது. ஏனெனில் அதே சமயத்தில் தான் தெனாலி திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது. சூர்யா, ஜோதிகா இருவருக்கும் தூது புறாவாக அந்த காலத்தில் நானே இருந்திருக்கிறேன். மேலும் ஷாலினி, அஜித் லவ் பண்ணிட்டு இருக்காங்க. எனக்கு தெரியாது. நான் உட்கார்ந்து அட்வைஸ் பண்ணிட்டு இருந்தேன். அஜித்துக்கு சினிமாவில் இருப்பவர்களை மட்டும் திருமணம் செய்யாதீர்கள் என சொல்லி கொண்டிருந்தேன்.
அப்போது அஜித் படத்தின் இயக்குனர் சரண் என்னிடம், ‘அஜித், ஷாலினி காதலித்துக் கொண்டு இருக்கிறார்கள்’ என சொன்னதும் எனக்கு அது கொஞ்சம் வியப்பாக இருந்தது. பிரண்ட்ஸ் படத்தில் சூர்யா, விஜய் கதாபாத்திரத்திற்கு பிறகு என்னை தேர்வு செய்திருப்பது சிறப்பாக இருந்தது படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவே அன்றைக்கு தெரிவித்து இருந்தார்.
இப்போ சிரிப்பதற்கான படம் என்றால் ஃப்ரெண்ட்ஸ் தான். ஷூட்டிங் எல்லாம் போகும் போது கேட்பார்கள் என்ன ஒரு காமெடி படம். இப்போது நீங்கள் எதற்காக படம் பண்ண மாட்டேன்றீங்க? என்று பல பேர் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் கூற வேண்டிய பதிலானது, இன்றைய சூழலுக்கு படம் எடுக்க வேண்டும் என்றால் ஒன்று கஞ்சா விற்க வேண்டும். இல்லையென்றால் துப்பாக்கி தயாரிக்க வேண்டும். இது இரண்டும் எனக்கு செய்ய தெரியாது. பிரண்ட்ஸ் படமானது வரும் 21 ஆம் தேதி திரையரங்குகளில் மீண்டும் வர இருக்கிறது. ரசிகர்கள் ஆதரவு தருவார்கள் என்று நிச்சயம் நம்புகிறேன். இவ்வாறு நடிகர் ரமேஷ் கண்ணா பேசினார்.
விழாவில் இயக்குநர் பேரரசு பேசியதாவது:
காமெடி படம் எடுப்பது மிகவும் சிரமம். காதல் காட்சி, சோக காட்சி போன்றவற்றில் தவறு செய்தால் அதை எடிட் செய்து கொள்ளாம். ஆனால் காமெடி காட்சி அப்படி கிடையாது. மலையாள இயக்குநர்கள் மிகவும் தேர்ந்தவர்கள். அவர்களுக்கு என்ன எடுக்க வேண்டும்? என்பது நன்றாக அறிந்தவர்கள். நேசமணி என்பது ட்ரண்ட் ஆகி இரண்டு ஆண்டுகள் இருக்கும்.
இந்த நிகழ்ச்சிக்கு தேவயானி வருவதை விட விஜயலட்சுமி வந்து இருந்தால் படத்திற்கு நல்ல ப்ரோமோஷன் ஆக இருந்து இருக்கும். விஜய் சார் நல்ல காமெடி உணர்வு கொண்டவர். சூர்யா பிதாமகன் படத்தில் கலக்கி இருப்பார். அதேப் போல ரஜினிக்கு தில்லு முல்லு, தம்பிக்கு எந்த ஊரு போன்ற படம் சிறந்த காமெடி படங்கள். கமல்ஹாசன் அவரைப் பற்றி நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர் சகலகலா வல்லவன்.
சமீபத்தில் செய்திகளை பார்க்கவே பயமாக இருக்கிறது. டெல்லி குண்டு வெடிப்பு சம்பவம், தற்பொழுது சவுதி அரேபியாவில் 42 பேர் மரணம் இவைகளை பார்ப்பதற்கு கூட மனம் வேதனை அளிக்கிறது. இந்த சூழலில் இப்படிப்பட்ட நகைச்சுவை திரைப்படமான பிரண்ட்ஸ் திரைப்படம் வெளியாக இருப்பது மனதிற்கு சற்று ஆறுதல் அளிக்கிறது.
இவ்வாறு இயக்குநர் பேரரசு பேசினார்.
