2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா கால்பந்து உலகக் கோப்பை தொடருக்கு தகுதி பெற்றுள்ளது ஸ்பெயின் கால்பந்து அணி. இதன் 17-வது முறையாக உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது அந்த அணி.
நடப்பு யூரோ சாம்பியன், முன்னாள் உலக சாம்பியன் என்ற அந்தஸ்துடன் இந்த தொடரில் ஸ்பெயின் பங்கேற்கிறது. கடந்த 2010-ல் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஃபிபா உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது ஸ்பெயின். அப்போது துடிப்பான வீரர்கள் அதிகம் நிறைந்த அணியாக ஸ்பெயின் விளங்கியது.
இப்போது மீண்டும் கிட்டத்தட்ட அதே மாதிரியான ஒரு அணியை ஸ்பெயின் கட்டமைத்துள்ளது. அதன் வெளிப்பாடாக அமைந்துள்ளது 2024-ல் யூரோ சாம்பியன் பட்டமும், 2025 நேஷனல் லீக் தொடரில் இரண்டாம் இடம் பிடித்ததும்.
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகின்றன. இதில் ஐரோப்பிய நாடுகளுக்கான தகுதி சுற்றில் ‘ஈ’ பிரிவில் இடம்பெற்ற ஸ்பெயின் அணி, 6 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றுள்ளது. ஒரு போட்டியை டிரா செய்துள்ளது. 16 புள்ளிகளுடன் ஸ்பெயின் அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது.
