வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் படிவத்துடன் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் கடந்த 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப்பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களை வழங்கி நிரப்பி அவற்றை பெறும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.
படிவங்களை தவறுதலாக பூர்த்தி செய்து முகாமிற்கு எடுத்து வரும் பொதுமக்களின் படிவங்களை வாக்குச்சாவடி அலுவலர்கள் ஒயிட்னர் மூலம் திருத்தி எழுதுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
மேலும், படிவம் சரியாக இருப்பின், ஆவணங்கள் ஏதும் பெறக் கூடாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தும், ஆவணங்களை கொண்டு வரும்படி வாக்காளர்கள் திருப்பி அனுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் எக்ஸ் பக்கத்தில் விளக்கமளித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் படிவத்துடன் எவ்வித ஆவணங்களையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார். கணக்கீட்டு படிவங்களில் வாக்காளர்கள் தங்களது சரியான விவரங்களை வாக்குச்சாவடி அலுவலர்களின் உதவியுடன் நிரப்பி சமர்ப்பிக்கலாம் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
